Published : 10 Sep 2022 06:12 AM
Last Updated : 10 Sep 2022 06:12 AM

இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லஸ் கடந்து வந்த பாதை

லண்டன்: இங்கிலாந்து அரியணையில் ஏறும் மிக வயதான நபராக சார்லஸ் உள்ளார். இவர் குழந்தை பருவத்தில் இருந்து அரண்மனையில் வளர்ந்தாலும், பாரம்பரிய முறைப்படி இவர் தனது கல்வியை அரண்மனையில் கற்கவில்லை. பள்ளிக்கு சென்று பயின்றார். கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரிக்கு சென்று வரலாற்று பாடத்தில் கடந்த 1970-ம் ஆண்டில் பட்டம் பெற்றார். பல்கலைக்கு சென்று பட்டம் பெற்ற அரசு குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபர் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையில் சேர்ந்து பைலட்டாக 7 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றினார். இங்கிலாந்து கடற்படையின் எச்எம்எஸ் பிரானிங்டன் என்ற கண்ணிவெடி அகற்றும் கப்பலின் கமாண்டராக பணியாற்றி 1976-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

சார்லஸ் இளவரசராக இருந்தபோது அவருக்கு காதல் தோல்வி அனுபவங்களும் ஏற்பட்டன. தற்போது அவரது இரண்டாவது மனைவியாக இருக்கும் கமீலாவை, சார்லஸ் முதலில் காதலித்தார். ஆனால் இந்த காதல் வெற்றிபெறவில்லை. அதன்பின் அமண்டா நாட்ச்புல் என்பவரை சார்லஸ் விரும்பினார். அவரும் சார்லஸை நிராகரித்தார்.

கடந்த 1981-ம் ஆண்டு சார்லஸ்-டயானாவை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். இதை டயானா ஏற்றுக் கொண்டதால், இவர்களது திருமணம் 1981-ல் நடந்தது. முதல் குழந்தை இளவரசர் வில்லியம் 1982-ல் பிறந்தார். இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி 1984-ல் பிறந்தார். சில ஆண்டுகளுக்கப் பின் சார்லஸ்-டயானா உறவில் விரிசல் ஏற்பட்டது. சார்லஸின் முன்னாள் காதலி கமீலாதான் இந்த பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது.

கடந்த 1992-ம் ஆண்டு இருவரும் பிரிந்து 1996-ல் விவாகரத்து பெற்றனர். அடுத்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். கடந்த 2005-ம் ஆண்டு முன்னாள் காதலி கமீலாவை, இளவரசர் சார்லஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப்பின், அரியணை ஏறும் நபராகவும், காமன்வெல்த் தலைவராகவும் இளவரசர் சார்லஸ் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். ராணி 2-ம் எலிசபெத் மறைவால், சம்பிரதாயப்படி, அடுத்த 24 மணி நேரத்தில் இளவரசர் சார்லஸை, மன்னர் 3-ம் சார்லஸாக லண்டனில் உள்ளசெயின்ட் ஜேம்ஸ் அரண்மனையின் அசெஷன் கவுன்சில் அறிவித்தது. தற்போது அவர் இங்கிலாந்து மன்னராகியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x