இங்கிலாந்து தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் மாறுகிறது

இங்கிலாந்து தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் மாறுகிறது

Published on

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்து, புதிய மன்னராக சார்லஸ் பதவியேற்றிருப்பதால் அந்த நாட்டின் தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் உள்ளிட்டவை மாறுகின்றன.

கடந்த 1952-ம் ஆண்டில் இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றார்.

அப்போது முதல் அந்த நாட்டின் தேசிய கீதத்தில் ‘‘காட் சேவ் தி குயின்’’ என்ற வரிகள் பாடப்பட்டது. தற்போது சார்லஸ் மன்னராகி இருப்பதால் ‘‘காட் சேவ் தி கிங்’’ என்று தேசிய கீதம் மாற்றப்படுகிறது.

இங்கிலாந்தின் நாணயங்கள், கரன்சியில் (பவுண்ட்) தற்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் படம் இடம்பெற்றிருக்கிறது.

இனிமேல் தயாரிக்கப்படும் நாணயம், கரன்சியில் மன்னர் சார்லஸின் படம் இடம்பெறும். அடுத்த 2 ஆண்டுகளில் புதிய நாணயம், கரன்சிகள் புழக்கத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதேபோல பாஸ்போர்ட், அஞ்சல் தலை, அஞ்சல் பெட்டிகள் ஆகியவற்றிலும் சார்லஸை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அரச பரம்பரையின் தனிக் கொடியும் மாற்றப்பட உள்ளது. அரச பரம்பரையை சேர்ந்தோரின் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

புதிய மன்னர் சார்லஸின் 2-வது மகன் ஹாரி அரச பரம்பரையில் இருந்து வெளியேறிவிட்டார். எனினும் ஹாரியின் குழந்தைகளுக்கு அரச பரம்பரை பதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in