பாகிஸ்தானை நாங்களும் வெறுக்கிறோம்: காரணங்களை அடுக்கும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

பாகிஸ்தானை நாங்களும் வெறுக்கிறோம்: காரணங்களை அடுக்கும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
Updated on
2 min read

பயங்கரவாத ஏற்றுமதி தொடர்பாக பாகிஸ்தான் மீது நாங்களும் வெறுப்படைந்துள்ளோம் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

ஆனாலும், இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டைப் புறக்கணித்த முடிவு, இந்தியாவின் காரணங்களிலிருந்தும் வேறுபட்டது என்றார் அவர்.

மேலும் உரி தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பது வேறு, பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து துல்லியத் தாக்குதலை ஆதரிப்பது வேறு என்றும் அவர் தரம் பிரித்துப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தானில் உள்ள நிலைமைகள் காரணமாக சார்க் மாநாட்டிலிருந்து விலகினோம். பயங்கரவாதம் (பாகிஸ்தானிலிருந்து) எங்கும் பரவிவிட்டது. இதனால் எங்களில் பலரும் பாகிஸ்தான் மீது கடும் வெறுப்படைந்தோம். இந்தியா உரி தாக்குதல் காரணமாக சார்க் மாநாட்டிலிருந்து விலகியது, ஆனால் எங்கள் காரணம் வேறு” என்றார் ஷேக் ஹசீனா.

டாக்காவில் ஷேக் ஹசீனா தனது இல்லத்திலிருந்து 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு பேட்டி அளிக்கையில் இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீதான வெறுப்புக்கு பயங்கரவாதம் காரணம் தவிர, வங்கதேச போர்க் குற்றங்கள் மீதான விசாரணை அதனையடுத்த மரண தண்டனை தீர்ப்புகள் பற்றி பாகிஸ்தானின் விமர்சனமும் இருக்கிறது

“பாகிஸ்தானுடன் அனைத்து விதமான அரசு தரப்பு உறவுகளை துண்டிக்குமாறு எனக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் உறவுகள் இருக்கும் என்றுதான் கூறி வருகிறேன். பிரச்சினைகளை பேச்சு வார்த்தைகள் மூலமே தீர்க்க முடியும் என்றுதான் கூறி வருகிறேன். பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்கான போரில் நாங்கள் வென்றோம். அவர்கள் அதில் தோற்கடிக்கப்பட்டவர்களே” என்று கூறிய ஹசீனா இந்தியாவின் ஆதரவை பிற்பாடு பாராட்டினார்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் புகுந்து துல்லியத்தாக்குதல் நடத்தியது பற்றி ஷேக் ஹசீனா கூறும்பொது “இருநாடுகளும் கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியின் புனிதத்தை காக்க வேண்டும்” என்றார்.

இதற்கு முன்பாக அடிப்படைவாத கும்பல்கள் ஏகப்பட்ட வலைப்பதிவர்களையும், இந்துக்களையும் கொன்ற போது நீங்கள் செயல்பட்டதை விட தற்போது திடீரென தாகேஸ்வரி கோயிலில் இந்து சமூகத்தினரிடையே பேசியுள்ளீர்களே என்று கேட்டபோது, “அது உண்மையல்ல. வங்கதேசம்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்ட முதல் நாடு. விசாரணைகள் முடிய தாமதமாகும் இது இங்கு அல்ல, எல்லா நாடுகளிலும்தான். ஆகவே கொலைகளுக்கு எதிராக நாங்கள் தாமதமாகச் செயல்பட்டோம் என்று கூறுவது நியாயமற்றது” என்றார்.

மனித உரிமைகள் ஆர்வலர்கள் குற்றவாளிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றனர்:

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் கைதிகளை மோசமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்துகிறீர்கள் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளதே? என்ற கேள்விக்கு, “குற்றவாளிகள் உரிமைகளுக்கு உரத்த குரல் கொடுப்பவர்களாக மனித உரிமை குழுக்கள் இருப்பது துரதிர்ஷ்டமே. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர்கள் ஏன் பேசுவதில்லை? இது துரதிர்ஷ்டமே. அமெரிக்காவில் என்ன நடக்கிறது? பள்ளிகளிலோ வேறு இடங்களிலோ தாக்குதல் நடத்தப்படும் போது, தாக்குதல்காரர்களை கொன்று மக்களை அவர்கள் காப்பதில்லையா. எங்கள் சட்ட அமலாக்கத் துறையினர் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை அழிக்கக் கூடாதா” என்றார்.

சீனாவுடனான உறவுகள் குறித்து...

நீங்கள் இந்தியா-வங்கதேச நல்லுறவு பற்றி பேசினீர்கள். அப்படியிருக்கும் போது வங்கதேசம் சீனாவின் பக்கம் சாய்வதாக நீங்கள் எப்படி கூற முடியும்? இல்லை. எங்கள் கொள்கைகள் தெளிவானது, அனைவருடனும் நல்லுறவை பேண விரும்புகிறோம். இந்தியா, பூடான், நேபாளத்துடன் நல்லுறவு வைத்துள்ளோம் அதே போல் பொருளாராதார ரீதியாக இந்தியா, சீனா, மியான்மார் ஆகியவற்றுடனும் நல்லுறவை பேணி வருகிறோம். வங்கதேசச் சந்தையின் மூலம் இந்தியா அதிக பலன்களை அடையும் நிலையில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in