Published : 09 Sep 2022 09:27 AM
Last Updated : 09 Sep 2022 09:27 AM

ராணி எலிசபெத் மறைவு: இங்கிலாந்து மன்னராக அரியணை ஏறுகிறார் இளவரசர் சார்லஸ் 

ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் | கோப்புப் படம்

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தினார். இதனால், அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அரியணை ஏறவிருக்கிறார். நேற்று (செப்.8) மாலை 6 மணிக்குப் பின்னர் ராணி எலிசபெத் மறைவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை தான் இங்கிலாந்தின் 56வது பிரதமராக லிஸ் ட்ரஸ்ஸை முறைப்படி நியமித்தார் ராணி எலிசபெத். தன் வாழ்நாளில் அவர் நியமித்த 15வது பிரதமர் லிஸ் ட்ரஸ். வழக்கமாக இந்த நிகழ்ச்சி பக்கிங்காம் அரண்மனையில் தான் நடைபெறும் ஆனால் ராணிக்கு நடப்பதில் சிரமம் இருந்ததால் இந்த முறை ஸ்காட்லாந்தில் நடந்தது. லிஸ் ட்ரஸுடன் கை, கால்கள் நடுங்கியபடி கைத்தடியுடன் மிகவும் சோர்வாகவே ராணி காட்சியளித்தார். இந்நிலையில் ராணி எலிசபெத் நேற்று இயற்கை எய்தினார்.

இதனால், ராணி எலிசபெத்தின் மகனான 73 வயது சார்லஸ் ஃபிலிப் ஆர்தர் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னராகிறார். சார்லஸ் தான் நீண்ட கால அரச குடும்ப வாரிசு என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். மன்னர் பதவிக்காக காத்திருக்கும் வாரிசுக்கு என்று குறிப்பிட்ட பணியோ, பொறுப்போ இல்லை. அதனால், அவரது பணியே காத்திருப்பாக மட்டும் தான் இருந்தது. சார்லஸ் கட்டுமானக் கலை, சுற்றச்சூழல், விவசாயம், இறை நம்பிக்கை, மாற்று மருத்துவம் ஆகியனவற்றில் ஆர்வம் காட்டிவந்தார்.

புவிவெப்பமயமாதல் எச்சரிக்கை: கடைசியாக சார்லஸின் கவனம் பெற்ற கருத்தாக இருப்பது அவர் உலக பொருளாதார கூட்டமைப்பு நிகழ்வில் பேசியது. 2020ல் அந்தக் கூட்டத்தில் பேசிய சார்லஸ், இந்த உலகம் பொருளாதார வளர்ச்சிகளைப் பெருக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் நாம் குவிக்கும் அதிகப்படியான செல்வங்களால் என்ன பயன்? ஒருநாள் இந்த உலகம் புவி வெப்பமயமாதல் விளைவுகளால் பேரழிவுகளை சந்திக்கும்போது நாம் சேர்ந்த செல்வமும் சேர்ந்தே அழிவதைக் காணலாம் என்று எச்சரித்தார். இயற்கை விவசாயம், இயற்கை உணவு ஆகியனவற்றிற்கு சார்லஸ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

சார்லஸின் இளம் வயது வாழ்க்கை: சார்லஸ் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1970 பட்டம் பெற்றார். 1971 முதல் 1976 வரை இங்கிலாந்து கடற்படையான ராயல் நேவியில் பணிபுரிந்தார். அவர் பைலட் பயிற்சியும் பெற்றார். சார்லஸுக்கு காதல் தோல்வி உண்டு. அவரது காதலி கமீலியா சார்லஸை கைவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவருக்கு திருமணம் செய்து கொள்ள குடும்பத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதனால் அமண்டா நாட்ச்புல் என்பவருக்கு காதலைச் சொன்னார். ஆனால் அவரும் சார்லஸை நிராகரித்தார்.

இந்த சூழலில் தான் 1981 பிப்ரவரியில் சார்லஸ் டயானா ஸ்பென்சரை சந்தித்தார். அப்போது டயானாவுக்கு 19 வயது. 1981 ஜூலை 29ல் சார்லஸ், டயானா திருமணம் ஒரு ஃபேரி டேல் திருமணம் போல் கோலாகலமாக நடந்தது. அவர்களின் முதல் குழந்தையாக ப்ரின்ஸ் வில்லியம் 1982ல் பிறந்தார். பிரின்ஸ் ஹாரி 1984ல் பிறந்தார். ஆனால் அதற்குள்ளதாகவே சார்லஸ், டயானா திருமணத்தில் சிக்கல் இருந்தது. 1992 ஜூனில் சார்லஸ், டயானா தம்பதி பிரிந்தனர். 1996ல் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் சார்லஸ் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய பரபரப்புகள் இல்லாமல் ஒதுங்கியே வாழ்ந்து வருகிறார். பழைய காதலி கமிலியாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். கடந்த 2020ல் லேசான கரோனா தொற்றுக்கு உள்ளாகி பின்பு மீண்டுவந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x