Published : 09 Sep 2022 05:44 AM
Last Updated : 09 Sep 2022 05:44 AM

நான் அதிபராக இருந்திருந்தால், உக்ரைன் போர் நடத்திருக்காது - அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ‘‘இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் மிகச் சிறந்த நட்பை வைத்திருந்தேன். மோடி மிகச் சிறந்த நபர். அவர் மிகப்பெரிய பணிகளை செய்து வருகிறார்’’ என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அமெரிக்காவில் 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். இது தொடர்பாக நான் விரைவில் முடிவெடுப்பேன். நான் மீண்டும் போட்டியிட்டால் பலர் மகிழ்ச்சியடைவர் என நினைக்கிறேன்.

இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் நான் மிகச் சிறந்த நட்பை வைத்திருந்தேன். மோடி மிகச் சிறந்த நபர். அவர் மிகப் பெரிய பணிகளை செய்து வருகிறார். அவர் செய்வதெல்லாம் எளிதான பணிகள் அல்ல. அமெரிக்க அதிபராக என்னைவிட சிறந்த நண்பரை இந்தியா ஒருபோதும் பெற்றதில்லை. அது போன்ற நெருக்கமான உறவை நான் ஏற்படுத்தினேன்.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் செய்த பணிகள் மோசமானவை. எங்கள் நாடு, இப்போது இருக்கும் மோசமான நிலையில் ஒரு போதும் இருந்ததில்லை. பல விஷயங்களில், நாங்கள் பலவீனமாக உள்ளோம். பொருளாதாரம் மிக மோசமாக உள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்காவின் குரல் மற்றும் மரியாதையை இழந்துவிட்டோம். அமெரிக்கா மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் பணியை திறம்பட மேற்கொள்ளவில்லை. முதலில் அமெரிக்கர்களை வெளியேற்றியிருக்க வேண்டும். அங்குள்ள அமெரிக்க பொருட்களை திரும்ப எடுத்து வந்திருக்க வேண்டும். 8,500 கோடி டாலர் மதிப்பிலான உபகரணங்களை நாங்கள் ஆப்கானிஸ்தானில் கைவிட்டு வந்துள்ளோம். இதுபோல் ஒருபோதும் நடந்ததில்லை.

புளோரிடாவில் எனது வீட்டில் நடத்தப்பட்ட எப்பிஐ சோதனை மிக மோசமானது. இது மக்கள் மத்தியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வேண்டுமென்றே செய்தது. இது போன்ற நடவடிக்கை பொருத்தமற்றது. நாட்டுக்கு மிக மோசமானது.

2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது, துணை அதிபர் பதவிக்கு எனது மகள் இவாங்கா டிரம்ப் போட்டியிடுவார் என நான் நினைக்கவில்லை. இது போன்ற சுவாரஸ்யமான யோசனை நான் இதுவரை கேட்கவில்லை. இதை பரிசீலிக்க மாட்டேன்.

ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடகள் நன்றாக செயல்படுகிறது. இது ட்விட்டரை விட சிறப்பாக செயல்படுகிறது என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

உக்ரைன் போர் நடத்திருக்காது

நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், ரஷ்யா உக்ரைனில் ஊடுருவியிருக்காது. அதிபர் புதின், போர் தொடுக்கும் முடிவை எடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது எனவும் அதிபர் டிரம்ப் தனது பேட்டியில் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x