ராணுவப் புரட்சிக்கு உடந்தை: துருக்கியில் 12,800 போலீஸார் பணியிடை நீக்கம்

ராணுவப் புரட்சிக்கு உடந்தை: துருக்கியில் 12,800 போலீஸார் பணியிடை நீக்கம்
Updated on
1 min read

துருக்கியில் சமீபத்தில் முறியடிக்கப்பட்ட ராணுவப் புரட்சிக்கு காரணமானவருடன் தொடர்பு இருந்ததாகக் கூறி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியில் அதிபர் ரிசப் டய்யிப் எர்டொகன் தலைமையிலான அரசை ராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்க கடந்த ஜூலை மாதம் முயற்சி நடந்தது. இது முறியடிக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, நீதி, நிர்வாகம், ராணுவம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கானோர் அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனிடையே, இந்தப் புரட்சிக்கு பெதுல்லா குலன் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசித்து வரும் இவர், இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

இதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குலன் உடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்ததால், 12,801 போலீஸார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 2,523 பேர் அதிகாரிகள் ஆவர். அங்குள்ள மொத்த போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 2.7 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in