Published : 07 Sep 2022 08:31 AM
Last Updated : 07 Sep 2022 08:31 AM

இந்தியா மற்றும் சீனாவுடன் உறவை மேம்படுத்தும் வெளியுறவு கொள்கை: ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல்

ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: சீனா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுடன் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தயாரிக்கப்பட்ட வெளியுறவு கொள்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இந்தியா நடுநிலை வகித்தது. இதே போல் சீனா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ‘ரஷ்யன் உலகம்’ என்ற பெயரில் தனது வெளியுறவு கொள்கையை ரஷ்யா மாற்றி அமைத்துள்ளது. இதற்கு அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஷ்ய உலகின் பாரம்பரியத்தையும் கொள்கைகளையும் ரஷ்யா பாதுகாக்க வேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் ரஷ்யர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள், ரஷ்ய கலாச்சார அடையாளங்களை காக்க ரஷ்ய கூட்டமைப்பு ஆதரவு அளிக்கிறது. கடந்த 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்தது பூகோள அரசியல் பேரழிவு.

முன்னாள் சோவியத் யூனியன் அமைதியை ரஷ்யா தொடர்ந்து மதிக்கிறது. இதை மேற்கத்திய நாடுகள் எதிர்க்கின்றன. சீனா, இந்தியா,மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒத்துழைப்பை ரஷ்யா அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா நிபந்தனை

இதற்கிடையில், உக்ரைன் மீதான போரை காரணம் காட்டி விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை ஐரோப்பிய நாடுகள் முழுமையாக நிபந்தனையின்றி நீக்க வேண்டும். அதுவரை ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ளாது என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் மாளிகை அதிகாரிகள் நேற்று திட்டவட்டமாக கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x