Published : 06 Sep 2022 12:58 PM
Last Updated : 06 Sep 2022 12:58 PM

பிரிட்டனின் புதிய இரும்புப் பெண்மணி லிஸ் ட்ரஸுக்கு காத்திருக்கும் சவால்கள்

லிஸ் ட்ரஸ்

லண்டன்: பிரிட்டனின் 56-வது பிரதமராகி இருக்கிறார் கன்சர்வேடிவ் கட்சியின் லிஸ் ட்ரஸ். மேலும் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டி கடந்த ஒருமாதமாக தீவிரமாக நடந்து வந்தது. இதில் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்குக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியில் லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக்குக்கு 42.6 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதிக வாக்குகளை பெற்ற லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) லிஸ் ட்ரஸ் அதிகாரபூர்வமாக பதவியேற்க உள்ளார். அவருக்கு ராணி எலிசபெத் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

யார் இந்த லிஸ் ட்ரஸ்: லிஸ் ட்ரஸ் 1975 ஆண்டு ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் மேரி எலிசபெத் ட்ரஸ். ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் தத்துவயியல், அரசியல், பொருளாதாரம் பயின்ற லிஸ் ட்ரஸ் பட்டப்படிப்பு முடிந்ததும் கன்சர்வேடிவ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

லிஸ் ட்ரஸின் ஆரம்பக் கால அரசியல் பயணம் தோல்விகளை சந்தித்தாலும் 2006 ஆம் ஆண்டும் தென்கிழக்கு லண்டன் பகுதிில் உள்ள கிரீன்விச்சின் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது அரசியல் பயணம் ஏறுமுகமாக அமைந்தது. பின்னர், 2010 ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சர், சுற்றுச்சூழல் செயலாளர், பிரிட்டனின் வர்த்தக செயலாளர், வெளியுறவுத்துறை அமைச்சர் என பல பதவிகளில் அங்கம் வகித்தார்.

பிரிட்டனின் பிரதமர்களாக இருந்த டேவிட் கேமரூன், தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகிய மூன்று பிரதமர்களின் கீழ் லிஸ் ட்ரஸின் பயணம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. அவரது திறமையான பணியின் காரணமாக அவர் தொடர்ந்து வெளிச்சத்திலேயே இருந்தார். அந்த வெளிச்சமே தற்போது லிஸ் ட்ரஸுக்கு பிரதமர் பதவியை பெற்று தந்துள்ளது.

பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர்: பிரிட்டன் வரலாற்றில் இதுவரை லிஸ் ட்ரஸ்ஸுடன் சேர்த்து மூன்று பெண்கள் பிரதமர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்னர் மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோர் பிரிட்டன் பிரதமர்களாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

காத்திருக்கும் சவால்கள்: அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கண்டித்து, அரசின் பொது நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவற்றின் நிறைவேற்றுவதற்கான செயல் திட்டத்தில் லிஸ் இறங்க வேண்டிய தேவை உள்ளது.

மேலும், சமீப ஆண்டுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை பிரிட்டன் வாசிகளை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. நாட்டின் பணவீக்கம் தற்போது 10% ஆக உள்ளது. அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 13% ஆக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது லிஸ் ட்ரஸ் எதிர்கொண்டுள்ள முக்கிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், பிரிட்டனில் அதிகரித்து வரும் இனவாதம், சிறுபான்மையினர் மீதான வன்முறை இவற்றை தடுப்பதற்கான கூடுதல் பொறுப்பும் லிஸ் தலைமையிலான அரசுக்கு உள்ளது.

வரி விதிப்பில் மாற்றம்: இங்கிலாந்தின் பொருளாதாரம் வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று லிஸ் ட்ரஸ் உறுதியளித்திருந்தார். அவர் உறுதியளித்தப்படி அதனை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். உண்மையில் லிஸ்ஸின் திறனை முழுமையாக வெளிக் கொண்டுவர இந்த பிரதமர் பதவி சிறந்த வாய்ப்பு என்று அரசியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

பிரெக்ஸிட் சவால்: பிரெக்ஸிட்டிலிருந்து பிரிட்டன் வெளியேறிய நிலையில், நிரப்பப்படாத பணியிடங்களை நிரப்புவதற்கு பணியாளர்களை கண்டுபிடிப்பது பிரிட்டிஷ் அரசிற்கு சவாலாகவே உள்ளது. மேலும் பிரெக்ஸிட்டால் இழந்த வர்த்தகத்தையும், செல்வாக்கையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டன் உள்ளது.

இந்தியாவும் - பிரிட்டனும்: போரிஸ் ஜான்சன் ஆட்சியில் அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக லிஸ் ட்ரஸ் திறம்பட செயல்பட்டார். இந்தியா - பிரிட்டன் இடையே மேம்படுத்தப்பட்ட பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுதாகின. இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் தொடக்கப் புள்ளியாகவும் அந்த ஒப்பந்தங்கள் அமைந்தன.

அந்தவகையில் லிஸ் ட்ரஸ் பிரதமரானதைத் தொடர்ந்து வர்த்தக ரீதியில் இந்தியா - பிரிட்டன் இடையே இனிமையான உறவு தொடர்ந்து நீடிக்கும் என்று நம்பப்படுகிறது.

போரிஸ் ஜான்சனின் விலகலுக்குப் பிறகு பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் ட்ரஸை பல எதிர்பார்ப்புகள் சூழ்ந்துள்ளன. இவற்றை எல்லாம் லிஸ் பூர்த்தி செய்வாரா.. இல்லையா.. என பொறுந்திருந்து பார்ப்போம்..!?

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x