

பாகிஸ்தானுக்கு எவரொருவரும் தீங்கு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது. பாகிஸ்தானுக்கும் துல்லிய தாக்குதல் நடத்தும் முழு திறன் உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே நிலவும் பதற்றம் குறித்து சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை பாகிஸ்தான் பிரதமர் நேற்று கூட்டி, விவாதித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நவாஸ் பேசியதாவது:
கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் எவ்விதமான தாக்குதலோ, விதிமீறலோ நடை பெற்றால், மக்களையும், நாட்டு எல்லையையும் பாதுகாக்க பாகிஸ் தான் அனைத்து விதமான நடவடிக் கையையும் எடுக்கும். இந்தியாவின் நடவடிக்கை இந்த பிராந்தியம் முழுமையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தாயகத்தைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுடன் ஒட்டுமொத்த தேசமும் உடன் நிற்கும். எல்லையில் அத்துமீறலைத் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். காஷ்மீர் விவகாரம் என்பது தேசப் பிரிவினையின் முடிக்கப்படாத செயல்திட்டம். இந்தியாவின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள பாகிஸ்தான் தயாராகவே உள்ளது. அமைதியை விரும்பும் பாகிஸ்தானின் குணத்தை பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறும்போது, “எல்லையில் பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் விரும்ப வில்லை. அதேசமயம் எதையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும். இந்தியா பொறுப்பற்ற மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது. மக்களின் அபிமானத்தைப் பெற கபட நாடகம் ஆடுகிறது ” என தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனை சந்தித்து, இந்தியா தொடர்ந்து ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடு பட்டு வருவதாக புகார் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமை நீதிபதி வருகை ரத்து
பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அன்வர் ஜாகீர் ஜமாலி வரும் 21,22,23-ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார்.
இந்திய தூதர் கவுதம் பம்பா வாலா, நேரில் சென்று, நீதி வழங்கல் மற்றும் அமலாக்கம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க ஜாகீர் ஜமாலிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
தற்போதைய சூழல்கள் காரணமாக பாகிஸ்தான் தலைமை நீதிபதி தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.