பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு: உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் பதவி விலகினார்

பிரித்தி படேல்.
பிரித்தி படேல்.
Updated on
1 min read

லண்டன்: பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாகி உள்ளார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் பிரித்தி படேல் பதவி விலகி உள்ளார். அதோடு லிஸ் டிரஸ் அமைச்சரவையில் தான் பங்கேற்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரித்தி படேல் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரிட்டன் அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் அவர் ஒருவராக இருந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். போரிஸ் ஜான்சனின் நெருங்கிய வட்டாரத்தில் பிரித்தியும் ஒருவர்.

“நாட்டுக்காக மக்கள் பணியை பின்வரிசையில் இருந்தபடியே தொடர்ந்து செய்வேன். அங்கிருந்தபடியே எனது கொள்கைகளை தாங்கி நிற்பேன். Witham பாராளுமன்ற தொகுதி பணிகளை தொய்வின்றி கவனிப்பேன். புதிய உள்துறை அமைச்சரை லிஸ் டிரஸ் முறைப்படி அலுவலக பொறுப்புகள் ஏற்றுக் கொண்டதும் நியமிப்பார்.

நாட்டுக்காக உங்களது (முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்) அமைச்சரவையில் நான் இணைந்து பணியாற்றிய வாய்ப்பை மரியாதையாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை எனக்கு கொடுத்தமைக்கு எனது நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கான பதவிக்கான ரேஸில் ரிஷி சுனாக் 60,399 ஓட்டுகளும், லிஸ் டிரஸ் 81,326 ஓட்டுகளும் பெற்றிருந்தார். அதன் மூலம் டிரஸ் பிரதமராக தேர்வாகியுள்ளார். லிஸ் டிரஸ்சுக்கு தனது வாழ்த்துகளையும் பிரித்தி தெரிவித்துள்ளார். புதிய பிரதமருக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in