

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பண்ணை வீடு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
முஷாரபை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்.
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான இருதய நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பர்வேஸ் முஷாரப் இன்று அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து பண்ணை வீட்டிற்கு மாற்றப்பட்டார்.
பாதுகாப்பு நிறைந்த பைசாபாத் - ரவால் டாம் சவுக் சாலையில் பர்வேஸ் முஷாரப் பாதுகாப்பு வாகனம் கடந்து சென்ற போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் ஒரு அடி அளவில் பெரும் பள்ளம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் முன்னாள் அதிபர் முஷாரப்பை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் வெடிகுண்டு சாலை ஓரத்தில் இருந்த சாக்கடை அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்ப்குதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் மேலும் வெடிகுண்டுகள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகள் குறி:
பர்வேஸ் முஷாரப்புக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேச துரோக குற்றச்சாட்டு:
பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் கடந்த 31-ம் தேதி ஏற்றுக் கொண்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.
1999 முதல் 2008 வரை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தன் நாட்டிலிருந்தே பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தவர் பர்வேஸ் முஷாரப். 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைச் சிறையில் அடைத்தும், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியும் நாட்டை ஆண்டு வந்தார்.
அதிபர் பதவியில் இருந்து இறங்கியதும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறி லண்டன் மற்றும் துபையில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.