மியான்மர் ராணுவ தாக்குதலால் அகதிகள் வருகை அதிகரிப்பு

மியான்மர் ராணுவ தாக்குதலால் அகதிகள் வருகை அதிகரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மியாமன்மர் ராணுவ தாக்குதலால் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் அகதிகளாக தஞ்சமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் 5.44 கோடி மக்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டு மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். பாமர் என்ற இன மக்கள் 70 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

அந்த நாட்டின் ராக்சைன் மாகாணத்தில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அரக்கனீஸ் இன மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் தனிநாடு கோரி ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 2009-ம் ஆண்டில் ‘‘அரக்கன் ஆர்மி’’ என்ற பெயரில் தனி ராணுவத்தை உருவாக்கி ராக்சைன் மாகாணத்தின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த சிலவாரங்களாக மியான்மர் ராணுவ வீரர்களுக்கும் அரக்கன் ராணுவவீரர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக மியான்மரில் இருந்து இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் பலர் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

மிசோரமில் ஏற்கெனவே 30,000 அரக்கனீஸ் மக்கள் அகதிகளாக உள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட அரக்கனீஸ் மக்கள் மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர்.

மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in