

புதுடெல்லி: அமெரிக்காவுக்கு கடந்த ஜூன் மாதம், கனடாவில் இருந்து 10 லட்சம் பேரும், மெக்சிகோவில் இருந்து 9.9 லட்சம் பேரும், பிரிட்டனில் இருந்து 2.7 லட்சம் பேரும், இந்தியாவில் இருந்து 1.4 லட்சம் பேரும், ஜெர்மனியில் இருந்து 1.3 லட்சம் பேரும் சென்றுள்ளனர்.
இந்த நாடுகளில் கனடாவும், மெக்சிகோவும், அமெரிக்காவுடன் எல்லைகளை பகிர்ந்துள்ளன. கடல் கடந்து வந்த வெளிநாட்டினரில் பிரிட்டனை சேர்ந்தவர்கள் முதல் இடத்திலும், இந்தியர்கள் 2-வது இடத்திலும் உள்ளனர். விசா வழங்குவதில் தாமதம், விமான கட்டண உயர்வு ஆகியவை இருந்தும் இந்தியர்களின் வருகை அதிகமாக இருப்பதாக சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
டெல்லி - நியூயார்க் வழித்தடத்தில் எகானமி ரிட்டன் டிக்கெட் விலை கரோனா பரவலுக்குப் முன்பு ரூ.70,000 முதல் ரூ.75,000-மாக இருந்தது. தற்போது இது ரூ.2 லட்சம் வரை உள்ளது.
இதுகுறித்து பயண ஏஜென்டுகள் கூறுகையில், ‘‘ ஏற்கெனவே விசா பெற்றவர்கள் மட்டுமே தற்போது அவசியமான பயணம் மேற்கொள்கின்றனர். முதல் முறைஅமெரிக்க விசா கோரி விண்ணப்பித்தவர்கள் அடுத்தாண்டு மார்ச்-ஏப்ரல் மாத பயணத்துக்காக தற்போது விசாரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்று தெரிவித்தனர்.