

நியு மெக்ஸிகோவைச் சேர்ந்த கலைஞர் ஜஸ்டின் க்ரோவ், மனிதச் சாம்பலில் இருந்து பாத்திரங்களைச் செய்கிறார். கடந்த ஆண்டு ஒரு புராஜக்டுக்காக இந்தச் சாம்பல் பாத்திரங்களை உருவாக்கியவர், நண்பர்களின் ஆலோசனையால் இதைத் தொழிலாக மாற்றிக்கொண்டார். ‘க்ரானிகல் க்ரிமேஷன் டிசைன்’ என்ற பெயரில், மனிதச் சாம்பலில் இருந்து காபி கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள் போன்றவற்றை உருவாக்கித் தருகிறார். ‘நான் 2015ம் ஆண்டு ஒரு புராஜக்டுக்காக 200 மனித எலும்புகளை விலைக்கு வாங்கினேன். அவற்றைத் தூளாக்கி, மண்ணுடன் கலந்து அழகிய பாத்திரங்களாக மாற்றினேன். மறுசுழற்சி முறையில் மனித எலும்புகளை பயன்படுத்துவதுதான் என்னுடைய திட்டம். மனிதச் சாம்பலைக் கேட்டு விளம்பரம் செய்தபோது, எதிர்வினைகள் மிக மோசமாக இருந்தன. இந்தத் திட்டத்தைக் கைவிட எண்ணினேன்.
ஆனால் நண்பர்கள் என்னை உற்சாகப்படுத்தினார்கள். ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தேன். நான் எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு இருந்தது. தங்கள் அன்புக்குரியவர்களின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை, தங்களுடன் வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டினார்கள். இறந்தவர்கள் பாத்திரங்கள் மூலம் தங்களுடனே இருக்கிறார்கள் என்ற திருப்தி பலருக்கும் கிடைத்திருக்கிறது. முதிய மனிதர் ஒருவரின் உடலை எரித்தால் 1.8 கிலோவில் இருந்து 2.7 கிலோ வரை சாம்பல் கிடைக்கும்.
பாத்திரம் செய்வதற்கு 100 கிராம் சாம்பல் மட்டுமே போதுமானது. சாம்பல், மண், தண்ணீர் எல்லாம் சேர்த்து, அழகான பாத்திரங்களை உருவாக்கிவிடுகிறோம். இந்தப் பாத்திரங்களை அடுப்பில் வைக்கலாம். உணவு சமைக்கலாம். கோப்பைகளில் காபி குடிக்கலாம். உங்களுக்கு மட்டுமே இது மனித சாம்பலில் செய்தது என்று தெரியும். மற்றவர்களுக்குச் சாதாரண பீங்கான் பாத்திரங்களாகத்தான் தோன்றும்’ என்கிறார் ஜஸ்டின் க்ரோவ்.
மனிதச் சாம்பலில் பாத்திரம் செய்வது நியாயம்தானா?
பிரேஸிலைச் சேர்ந்த 36 வயது அர்மன்டோ டி அண்ட்ரேட், வீட்டின் தரைத் தளத்தில் அடைக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அர்மன்டோவை, அவரது அப்பாவும் சித்தியும் சேர்ந்து தரைத்தளத்தில் இருந்த ஓர் இருட்டறையில் தள்ளிவிட்டனர். சிறிய துளையைத் தவிர, ஜன்னல் கூட இல்லை. உணவு, நீர், உடை அவ்வப்போது கொடுத்தனர். அர்மன்டோவின் நண்பர்கள் காணாமல் போன நாளில் இருந்து விசாரித்து வருகின்றனர். அவன் தொலைதூரத்துக்குப் படிக்கச் சென்றுவிட்டான், வேலைக்குச் சென்றுவிட்டான், திருமணமாகி குடும்பத்துடன் நல்ல நிலையில் வசிக்கிறான் என்று ஆண்டுகள் செல்லச் செல்ல, நம்பும் விதத்தில் பொய்களைக் கூறி வந்திருக்கின்றனர்.
ஆனால் நண்பர்களுக்கு மட்டும் சந்தேகமாகவே இருந்தது. காவல்துறையில் புகார் கொடுத்தனர். காவலர்கள் தரைத் தளத்துக்குச் சென்று, கதவை உடைத்து, அர்மன்டோவை மீட்டனர். நீண்ட தாடியும் நீண்ட நகங்களுமாகக் காட்சியளித்தார். வெளிச்சத்தை அவரால் பார்க்க முடியவில்லை. பேச்சும் வரவில்லை. யாரையும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. மெல்லிய உடலுடன் பரிதாபமாக இருந்தவரை, உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். அர்மன்டோவின் அப்பாவை விசாரித்தபோது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தவன், தானே அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான் என்று சொல்லியிருக்கிறார். வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. உண்மை இனிமேல்தான் தெரியவரும் என்கிறார்கள்.
சே... எவ்வளவு கொடூரம்…