

ரியோ நகரில் உள்ள எல்லோரும் இன்றைக்கு இரண்டு கேள்விகளைக் கேட்கின்றனர். 1. பிரேசில் நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்றுவரும் வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புகள் காரணமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு பாதிப்பு வருமா? 2. உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு எது?
போட்டிகள் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில்கூட பிரேசில் வீதிகளில் உற்சாகமோ உணர்ச்சியோ இல்லாமல் மந்தமாக இருக்கிறதே என்று நண்பர்கள் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றனர் – அதுவும் பிரேசிலே போட்டியை நடத்தும்போது! பிரேசில் நாட்டுக் கொடிகளும் குறைவாகவே இருக்கின்றன. முன்பெல்லாம் கடைகளிலும் கடைவீதிகளிலும் பிரேசில் தேசியக் கொடிகளாகவே இருக்கும்.
“ஒரு பக்கம் பிரேசில் அரசின் பொறுப்பற்ற இந்தச் செலவு, திறமையற்ற நிர்வாகம், ஊழல் ஆகியவற்றைக் காணும்போது கடும் கோபமும் ஆத்திரமும் ஏற்படுகிறது; அதே சமயம் இந்தப் போட்டியிலும் பிரேசில்தான் வெற்றிபெற வேண்டும் என்ற ஆவலும் மேலிடுகிறது” என்று சொன்னார் ஒரு பெண். பிரேசிலின் இருநிலை மனதை அவர் வெளிப்படுத்தினார் என்று சொல்லலாம்.
உயர்ந்துகொண்டே போகும் விலைவாசி, கடுமையான பொருளாதார நிலை போன்ற சூழலிலிருந்து மீள பிரேசில் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். பேருந்து ஓட்டுநர்கள், வங்கியின் பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், அருங்காட்சியக ஊழியர்கள், போலீஸ்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களும் அடுத்தடுத்து வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து சம்மேளனத்துக்கோ பிரேசில் அரசுக்கோ இது நிச்சயம் மகிழ்ச்சியைத் தராது. ராணுவத்தினரும் போலீஸாரும் பெரும் எண்ணிக்கையில் வீதிகளிலும் விளையாட்டு மைதானங்களிலும் இப்போது குவிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்யும் பிரேசிலின் அனைத்துத் தரப்பினருமே தங்களுடைய கோபத்தைக் கால்பந்து வீரர்கள் மீதும் திருப்பியுள்ளனர். இது நிச்சயம் பிரேசில் அணி வீரர்களின் மனங்களைப் பாதித்து, அதன் முடிவாக ஆட்டத்திலும் அவர்களால் சரியாகக் கவனம் செலுத்த முடியாத நிலைமை உருவாகலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது!