Published : 02 Sep 2022 04:33 PM
Last Updated : 02 Sep 2022 04:33 PM

வெள்ளம் சூழ்ந்த பாகிஸ்தான் - நாசா வெளியிட்ட புகைப்படமும் பின்னணியும்

வெள்ள பாதிப்புக்கு முன் (இடது), வெள்ள பாதிப்புக்கு பின் எடுக்கப்பட்ட படம் (வலது)

இஸ்லமாபாத்: கனமழை - வெள்ளப் பெருக்கு காரணமாக வரலாறு காணாத இயற்கைப் பேரிடர் துயரத்தை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. பாகிஸ்தான் வெள்ளப் பெருக்கில் இதுவரை 1200 பேர் பலியாகியுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3 கோடிக்கு அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வீடு இழப்பு, நோய்த் தொற்றை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த வெள்ளத்தினால் சுமார் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பொருளாதார ரீதியாக நட்பு நாடுகள் உதவ வேண்டும் என்றும் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு இதுவரை சவுதி அரேபியா, சீனா, கத்தார், துருக்கி, உஸ்பெகிஸ்தான், அமீரகம் ஆகிய நாடுகள் உதவி புரிந்துள்ளன. பாகிஸ்தானுக்கு 30 மில்லியன் டாலர் நிதி வழங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், நிவாரணத்துக்காக சுமார் 160 மில்லியன் டாலர்களை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது.

குற்றச்சாட்டு: இந்த வெள்ளம் இயற்கையினால் உருவானது அல்ல, இது மனித தவறுகளால் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டவை என்று பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையும் இதையே சுட்டிக் காட்டியுள்ளது. உலக நாடுகளே விழித்து கொள்ளுங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பொது செயலாளர் ஆண்டோனியா குத்தரெஸ் குரல் எழுப்பியுள்ளார்.

செயற்கைகோள் படம்: இந்தச் சூழலில் பாகிஸ்தானின் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளின் செயற்கைக்கோள் படங்களை நாசா வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்ட இப்படம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி எடுக்கப்பட்டது. படத்தில் சிந்து நதியிலிருந்து கரை ஓடிய வெள்ளம் எவ்வாறு சுமார் 100 கிலோமீட்டர் வரை உள்ள நிலப் பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்குகிறது. இப்படத்தின் மூலம் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை புரிந்துகொள்ள முடிகிறது.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x