

தெற்கு இலங்கையில் உள்ள சில சக்திகள் தன்னை கொலை செய்யும் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் விக்னேஸ்வரனின் உரை வாசிக்கப் பட்டது. இதில் அவர் கூறும்போது, “என்னைக் கொலை செய்யவும் அந்தப் பழியை எல்டிடிஇ (தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்) மீது சுமத்தவும் சதி நடப்பதாக எனக்கு தொடர்ந்து தகவல் வருகிறது” என்றார்.
யாழ்ப்பாணத்தில் ‘எழுகத் தமிழ்’ பேரணி நடந்த ஒரு வாரத்தில் விக்னேஸ்வரன் இக்குற்றச்சாட்டை எழுப்பி யுள்ளார். வட இலங்கையில் ராணுவமயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக இப்பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ற இப்பேரணி 2002- 2004-ல் எல்டிடிஇ தொடர்புடைய பொங்கு தமிழ் பேரணியுடன் ஒப்பிடப்படுகிறது.
மேலும் சிங்களர்களின் உரிமைக்காக ‘பொடு பால சேனா (பிபிஎஸ்)’ என்ற சிங்கள பவுத்த அமைப்பு, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வவுனியாவில் போராட்டம் நடத்திய சில நாட்களில் இக்குற்றச்சாட்டை விக்னேஸ்வரன் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய 2 நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களும் இலங்கையில் விவாதங்களை எழுப்பியுள்ளன.