Published : 01 Sep 2022 03:40 PM
Last Updated : 01 Sep 2022 03:40 PM

புகழஞ்சலி: மிகைல் கோர்போசேவ் - உண்மையான அமைதியின் முகம்!

சோவியத்தின் கடைசி அதிபர் மிகைல் கோர்பசேவ் | கோப்புப் படம்

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வுக் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91.

1931-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி ரஷ்யாவின் பிரிவோல்னோயீல் பிறந்த மிகைல் கோர்பசேவ் தனது கிராமத்தில் நாஜிக்களின் ஊடுருவலை நேரில் கண்டதால் போரின் சாட்சியாக தனது சிறுவயது வாழ்க்கை மாறியதாக பலமுறை கூறியதுண்டு. தன்னுடைய 19 வயதில் சட்டம் பயில்வதற்காக மாஸ்கோ சென்ற இவர், கம்யூனிஸ்ட் கொள்கை மீது ஆர்வம் கொண்டு அக்கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றத் தொடங்கினார். 1985-ஆம் ஆண்டு சோவியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மிகைல் கோர்பசேவ், அதிபராக பதவியேற்றார்

அதிபராக... - மிகைலின் அரசியல் வாழ்வைப் பொறுத்தவரை அவர் சீர்திருத்தவாதியாகவே அறியப்படுகிறார். அவர் சோவியத் யூனியனை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சீர்திருத்த விரும்பினார். அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொண்டார். மேற்கு நாடுகளுடன் நட்புறவுக் கொண்டார். மிகைலின் இம்மாதிரியான நடவடிக்கைகளை ரஷ்யர்கள் விரும்பவில்லை. ரஷ்யாவின் சூப்பர் பவர் அங்கீகாரத்தை மிகைல் சிதைப்பதாகவும், அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் பெரும் குழப்பத்திற்கும் காரணமாக இருப்பதாக அவர்கள் நினைத்தனர்.

எல்லாவற்றையும்விட, சோவியத்தில் இணைந்திருந்த நாடுகளுக்கு குடியரசு உரிமை பெறுவதற்கான உரிமையை மிகைல் வழங்கினார். இதன் பொருட்டு சோவியத்தில் இருந்த உக்ரைன் உட்பட 15 நாடுகள் நாடுகள் சுதந்திரம் அடைந்தன. 1989-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக பனிப்போர் முடிவுக்கு வர இவர் காரணமாக இருந்தார். இதன் காரணமாக மிகைல் கோர்பசேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு விருது 1990-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.

தொடர் தடுமாற்றத்தை சந்தித்த மிகைல் கோர்பசேவ் ஆட்சி 1991-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து, சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். போரிஸ் யெல்ட்சின் ரஷ்யாவின் அதிபராக பதவியேற்றார்.

புதினுக்கு நேரெதிர்... - மிகைல் கோர்பசேவ் தற்போது ரஷ்யாவின் அதிபராக உள்ள புதின் குணநலன்களிலிருந்து முற்றிலும் மாறுபாடு உடையவராக இருந்தார். மிகைல் பிற நாடுகள் மீதான படையெடுப்பைத் தவிர்த்தார். மாறாக, பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தார்.

புதினுடன் மிகைல் கோர்பசேவ்

சமீபத்தில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பையும் மிகைல் விமர்சித்தார். உக்ரைன் படையெடுப்பு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மனித உயிர்களை விட விலைமதிப்பற்றது எதுவும் உலகில் இல்லை. பரஸ்பர மரியாதை மற்றும் ஆர்வங்களின் அங்கீகாரத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளே மிகவும் கடுமையான முரண்பாடுகள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரே சாத்தியமான வழி” என்றே தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு தனது நாள் முழுவதும் அமைதியின் முகமாக அறியப்பட்ட சோவியத்தின் கடைசி அதிபரான மிகைல் கார்பச்சேவ் வயது முதிர்வுக் காரணமாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி மறைந்தார். அமைதியின் உண்மையான தலைவர் என்று அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் தனது நாள் வாழ்நாள் முழுவதையும் சான்றாக்கி விடைபெற்று இருக்கிறார்.

பிரதமர் மோடியின் புகழஞ்சலி: “வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த 20-ம் நூற்றாண்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மிகைல் கோர்பசேவ் மறைவிற்காக அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். இந்தியாவுடனான உறவை பேணுவதில் அவர் ஆற்றிய பங்களிப்பை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x