

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர். 31 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து கலிபோர்னியா நெடுஞ்சாலைத் துறை போலீஸ் அதிகாரி கூறும்போது, "கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணிகளுடன் வேகமாக வந்த சுற்றுலா பேருந்து நிலை தடுமாறி, லாரியின் மீது மோதியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 13 பேர் பலியாகினர்.
31 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக கலிபோர்னியா போலீஸார் தெரிவித்தனர்.