Published : 15 Oct 2016 10:57 AM
Last Updated : 15 Oct 2016 10:57 AM

அவதூறு வழக்கை சந்திக்க தயார்: ட்ரம்புக்கு நியூயார்க் டைம்ஸ் சவால்

அவதூறு வழக்கை எதிர்கொள்ள தயார் என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சவால் விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தொழிலதிபர் ட்ரம்புக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் முன்னணி நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்’, ட்ரம்புக்கு எதிராக 2 பெண்கள் அளித்த பேட்டியை அண்மையில் செய்தியாக வெளியிட்டது.

அதில் ஜெசிகா லீட்ஸ் (70) என்பவர் கூறியபோது 30 ஆண்டு களுக்கு முன்பு விமானத்தில் பயணம் செய்தபோது அருகில் அமர்ந்திருந்த ட்ரம்ப் அத்துமீறி நடந்து கொண்டார். தகாத இடங்களில் தொட்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மற்றொரு பெண் ரேச்சல் குரூக்ஸ் கூறியபோது, 2005-ம் ஆண்டில் மேன்ஹாட்டன் ட்ரம்ப் டவரில், ரியல் எஸ்டேட் நிறுவன வரவேற்பாளராக பணியாற்றிய போது ஒருநாள் காலையில் ட்ரம்ப் வலுக்கட்டாயமாக முத்தமிட்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த செய்தியைக் கண்டித்து டிரம்பின் வழக்கறிஞர் குழு, நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ட்ரம்ப் எச்சரிக்கை

அதிபர் தேர்தலில் ட்ரம்பை தோற்கடிக்க வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவம் நடந்ததாக ஒரு பெண் கூறுகிறார். 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக மற்றொருவர் கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் அவர்கள் மவுனமாக இருந்தது ஏன், இப்போது திடீரென அவ தூறுகளை அள்ளி வீசுவது ஏன்?

ட்ரம்பின் நற்பெயரைக் கெடுக்க விரும்புகிறவர்களுக்கு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் மேடை அமைத்து கொடுக்கிறது. அவருக்கு எதிரான செய்தியை நாளிதழின் இணையத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் சட்ட நடவடிக்கை (அவதூறு வழக்கு) எடுக்கப்படும்.

இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் சவால்

இதற்கு நியூயார்க் டைம்ஸ் தரப்பில் அதன் சட்ட ஆலோசகர் டேவிட் மெக்ரோ, ட்ரம்பின் வழக் கறிஞர் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ட்ரம்பின் வார்த்தைகள், செயல்பாடுகளே அவரது புகழுக்கு களங்கம் விளைவித்து வருகின்றன. நாங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டே செய்தி வெளியிட்டுள்ளோம். 2 பெண் களின் குற்றச்சாட்டுகளை மட்டு மல்ல, ட்ரம்பின் மறுப்பையும் வெளியிட்டிருக்கிறோம். செய்தியை வெளியிட்டதற்காக வருத்தமோ, மன்னிப்போ கோர முடியாது. செய்தியை திரும்ப பெற முடியாது. இணையத்தில் இருந்து நீக்கவும் முடியாது.

சம்பந்தப்பட்ட 2 பெண்களின் வாக்குமூலங்களைக் கேட்க அமெரிக்க குடிமக்களுக்கு உரிமை இல்லை, தனக்கு எதிராகப் பேசுகிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் கருதினால் நீதிமன்றத்தில் அவரைச் சந்திக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு டேவிட் மெக்ரோ பதில் அளித்துள்ளார்.

பெண் நிருபருக்கு நோட்டீஸ்

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பீப்பிள் மேகசின் இதழின் முன்னாள் பெண் நிருபர் நடாஷா ஸ்டாய்நோப் சில நாட்களுக்கு முன்பு கூறியபோது, 2005 டிசம்பரில் ட்ரம்பை பேட்டி காண அவரது வீட்டுக்குச் சென்றேன். அப்போது என்னை ஒரு அறைக்குள் தள்ளிய ட்ரம்ப் தகாதவிதமாக நடந்து கொண்டார். நல்லவேளையாக சமையல்காரர் அங்கு வந்ததால் நான் தப்பினேன் என்று தெரிவித்தார்.

அந்தப் பெண் நிருபருக்கும் ட்ரம்பின் வழக்கறிஞர் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக பீப்பிள் மேகசின் கூறியபோது, நடாஷாவுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x