

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலைய தாக்குதல் தொடர்பாக சட்டவிரோத ‘தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பின் தலைவர் கள் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
கராச்சி விமான நிலைய காவல் நிலையத்தில், பயங்கரவாத செயல்கள் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டது. விமான நிலைய பாதுகாப்பு படை துணை இயக்குநர் அளித்த புகாரின் பேரில், டி.டி.பி.யின் தலைவர் முல்லா பஸுலுல்லா, செய்தித் தொடர்பாளர் ஷாகி துல்லா ஷாகித் மற்றும் பிற தீவிரவாதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் வழி நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்காக கராச்சி நகரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
கராச்சி விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தாக்குதல் சம்பவத்தில் 37 பேர் இறந்தனர். 6 மணி நேர கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகே விமான நிலையத்தை பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இத்தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பிற விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
கராச்சி விமான நிலையத்துக்கு வெளியில் உள்ள விமான நிலைய பாதுகாப்பு படை பயிற்சி முகாம் மீதும் தீவிரவாதிகள் புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் படைவீரர்கள் இவர்களை விரட்டியடித்தனர்.