

அமெரிக்க உளவு அமைப்பிடமிருந்து 50 கோடி பக்க ரகசியங்களைத் திருடிய முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், கிளன் பர்னி பகுதியைச் சேர்ந்தவர் ஹரோல்டு தாமஸ் மார்ட்டின் (51). அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய அவர் கடந்த 2000-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அதன்பின் அமெரிக்க உளவுப் பிரிவான தேசிய பாதுகாப்பு அமைப்பில் (என்எஸ்ஏ) ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 10 ஆண்டுகள் அவர் என்எஸ்ஏவில் பணியாற்றி உள்ளார். அப்போது அதன் ரகசிய ஆவணங்களைச் சிறிது சிறிதாக திருடி வந்துள்ளார். அந்த வகையில் சுமார் 50 கோடி பக்க டிஜிட்டல் ஆவணங்களைத் திருடி, தனது வீடு மற்றும் காரில் மறைத்து வைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்டில் எப்பிஐ போலீஸார் அவரைக் கைது செய்தனர். ஆனால் இந்த தகவல் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. அவர் மீதான வழக்கு விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்டிமோர் நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போதுதான் மார்ட்டின் கைது விவகாரம் வெளியே தெரிந்தது.
பூஸ் ஆலன் ஹாமில்டன் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் என்எஸ்ஏவில் மார்ட்டின் பணியாற்றி உள்ளார். இதே நிறுவனத்தில்தான் எட்வர்ட் ஸ்னோடென்னும் பணியாற்றினார். அமெரிக்காவின் ரகசிய ஆவணங் களைத் திருடி கடந்த 2013-ம் ஆண்டில் ஊடகங்களில் வெளி யிட்ட ஸ்னோடென் தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்திருப்பது நினைவுகூரத்தக்கது.