Published : 04 Oct 2016 08:26 AM
Last Updated : 04 Oct 2016 08:26 AM

‘செல்’கள் ஆராய்ச்சியில் சாதனை: ஜப்பான் விஞ்ஞானி ஓஷுமிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு, ஜப்பான் விஞ்ஞானி யோஷிநோரி ஓஷுமிக்கு வழங்கப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டில் உள்ள ‘கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகம்’ மருத்துவத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. (இந்த விருது ஆல்பிரட் நோபல் பெயரில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.) உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுக்கு, இந்த ஆண்டு ஜப்பான் விஞ்ஞானி யோஷி நோரி ஓஷுமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை கரோலின்ஸ்கா பல்கலைக்கழகம் நேற்று வெளி யிட்டது.

ஜப்பானின் டோக்கியா பல்கலைக்கழகத்தில் ஓஷுமி ஆராய்ச்சி செய்து வருகிறார். மனித உடலில் உள்ள செல்கள் பற்றி (ஆட்டோபேஜி) தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

மனித உடலில் செல்கள் அழிவது, புதிய செல்களை தானே உருவாக்கிக் கொள்வது, செல்கள் தம்மைத் தாமே எப்படி அழித்துக் கொள்கின்றன போன்ற பல ஆய்வுகளை நடத்தி பல உண்மைகளை கண்டறிந்துள்ளார்.

இந்த சாதனைக்காக நோபல் பரிசுக்கு ஓஷுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானின் புகுவோகா நகரில் கடந்த 1945-ம் ஆண்டு பிறந்தவர் ஓஷுமி.

கடந்த ஆண்டு அயர்லாந்து மருத்துவர் வில்லியம் காம்பெல், ஜப்பான் மருத்துவர் சடோஷி ஒமுரா, சீன மருத்துவர் யூயூ டு ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறது. வேதியியலுக்கு புதன்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக் கப்படுகின்றன. அத்துடன் பொருளாதாரம் மற்றும் இலக்கியத் துக்கான நோபல் பரிசுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளன.

நோபல் பரிசுடன் சுமார் ரூ.6 கோடியே 25 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x