Published : 29 Oct 2016 02:19 PM
Last Updated : 29 Oct 2016 02:19 PM

உலகமசாலா: கல்லீரலையும் கொடுத்து, கல்யாணமும் செய்துகொண்ட அபூர்வ மனிதர்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹீதருக்கு (வயது 27) கல்லீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டது. கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யா விட்டால், சில மாதங் களில் ஹீதர் உயிர் இழந்துவிடுவார் என்றனர் மருத்துவர்கள். கல்லீரல் தானம் பெற விண்ணப்பித் தார் ஹீதர். ஆனால் அவருக்கு முன்பு ஏராள மானோர் கல்லீரலுக்காகக் காத்திருந்தனர். வேறு வழியின்றி, தானே கல்லீரல் கேட்டு விளம்பரம் கொடுத்தார்.

அதிலும் பலன் இல்லை. ஒருநாள் ஹீதரின் நிலையைப் பற்றி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தார் அவரது உறவினர் ஜாக். அருகில் வேலை செய்துகொண்டிருந்த கிறிஸ் டெம்சே, சட்டென்று தான் கல்லீரல் தானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். இதுவரை முன்பின் பார்த்திராத, கேள்விப்படாத ஒருவருக்கு, ஒரு மனிதர் தானாகக் கல்லீரல் தானம் அளிக்க விரும்பியதை எண்ணி ஆச்சரியத்தில் உறைந்து போனார் ஜாக். ஹீதருக்குத் தகவல் வந்தது. அவரும் அவரது அம்மாவும் கிறிஸ் டெம்சேயின் செயலை எண்ணி, கண்ணீர் விட்டனர். மருத்துவப் பரிசோதனையில் கிறிஸ் கல்லீரல் நூறு சதவீதம் ஹீதருக்கு ஒத்துப் போனது.

இருவரும் முதல்முறை சந்தித்தனர். ஹீதரும் அவரது அம்மாவும் நன்றி சொல்லி, அழுதார்கள். ‘வாழ்க்கையில் நாம் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. இது ஒன்றும் பெரிய விஷயமும் இல்லை. என்னால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடிகிறது என்பதே அற்புதமானது’ என்றார் கிறிஸ். இல்லினாய்ஸ் மருத்துவமனையில் இருவருக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் ஹீதருக்குச் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. தொடர்ந்து மருத்துவம் அளித்ததில் ஹீதரின் உடல் புதிய கல்லீரலை ஏற்றுக்கொண்டது. இருவரின் உடலும் நன்றாகத் தேறின. தன் உயிரைக் காப்பாற்றிய கிறிஸ் மீது ஹீதருக்கு அளவற்ற அன்பும் மதிப்பும் பெருகின. நட்பு தொடர்ந்தது. கடந்த டிசம்பர் மாதம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்று கேட்டார் கிறிஸ். ‘எப்போது இதைக் கேட்பார் என்று காத்திருந்தேன். சட்டென்று சம்மதத்தைத் தெரிவித்துவிட்டேன். ஏற்கெனவே என் உயிரைக் காப்பாற்றியவர், என் வாழ்க்கையையும் காப்பாற்றி விட்டார். அக்டோபர் முதல் வாரம் திருமணம் நடைபெற்றது. இதுவரை உலகம் கண்டிராத அற்புதமான மனிதருடன் நான் வாழ்கிறேன். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடும் புன்னகையோடும் நகர்கிறது!’ என்கிறார் புது மணப்பெண் ஹீதர். கல்லீரலையும் கொடுத்து, கல்யாணமும் செய்துகொண்ட அபூர்வ மனிதருக்குப் பாராட்டுகள்!

டின்களில் விற்பனையாகும் காற்று

பெய்ஜிங் நகரில் காற்று மாசு அதிகரிக்கிறது என்ற விமர்சனங்கள் வரும்போது, மக்கள் தூய்மையான காற்றைத் தேடி ஓடுகின்றனர். ‘பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கேன்களில் தூய்மையான காற்று விற்பனை வெற்றிகரமாக நடந்து வருகிறது. அந்தத் தொழிலை பெய்ஜிங்கில் ஆரம்பித்தால், மக்களுக்குப் பயன்படும் என்று எண்ணினேன். ’பீஜிங் ஏர்’ என்ற பெயரில் கேன்களில் காற்றை விற்கும் தொழிலை ஆரம்பித்தேன். கேன் காற்று எடை குறைந்தது. எடுத்துச் செல்வது எளிது. பீஜிங்கில் நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது, உணவுகளையோ உடைகளையோ வாங்கிச் செல்வதைவிட, காற்று கேன்களை வாங்கிச் சென்றால், சிறந்த பரிசாக இருக்கும். நைட்ரஜன் 77%, ஆக்ஸிஜன் 20%, இருக்கின்றன. 320 மி.லி. கொண்ட ஒரு கேனின் விலை 268 ரூபாய்’ என்கிறார் பிரிட்டனில் பிறந்து, பெய்ஜிங்கில் வசிக்கும் டொமினிக் ஜான்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x