

இராக் மற்றும் அமெரிக்க தலைமையிலான ராணுவ படைகள் விரைவில் ஐ.எஸ். இயக்கத்தை இராக்கில் இருந்து வெளியேற்றும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.
இராக்கில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள மொசுல் நகரை மீட்க ராணுவம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக மொசுல் நகரத்தை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. சுமார் 3 லட்சம் வீரர்கள் ஆயுதங்களுடன் மொசுல் நகரில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும்போது, "அமெரிக்கப் படைகளின் உதவியுடன் இராக் ராணுவம் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதியான மொசுல் நகரை நெருங்கிவிட்டது. விரைவில் இராக்கிலிருந்து ஐஎஸ் அமைப்பை வெளியேற்றி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் ஐஎஸ்ஸுக்கு எதிராக சண்டை நடக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று ஒபாமா கூறினார்.
முன்னதாக, இராக்கின் 2-வது மிகப்பெரிய நகரமான மொசுல், கடந்த 2014-ல் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இதையடுத்து நாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்ற ஐஎஸ் மேற்கொண்ட முயற்சியை ராணுவம் முறியடித்தது.
இந்த நிலையில், ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள மொசுல் நகரை மீட்க போர் தொடங்குவதாக அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி திங்கட்கிழமை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.