Published : 26 Aug 2022 05:56 AM
Last Updated : 26 Aug 2022 05:56 AM

உக்ரைன் விவகாரம் | ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக முதல்முறை இந்தியா வாக்களிப்பு

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதன் முறையாக வாக்களித்தது.

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரியில் தாக்குதலை தொடங்கியது. இதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான தீர்மான விவகாரங்களில் இந்தியா ஒதுங்கியே இருந்தது. இந்த நிலையில், தற்போது உக்ரைன் பிரச்னையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இதுவரையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மான நிகழ்வுகளிலும் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. இந்தியாவின் இந்த செயல், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளிடையே கடும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், உக்ரைனின் 31-வது சுதந்திரதின கொண்டாட்டத்தையொட்டி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் முன் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட உக்ரைன் தொடர்பான தீர்மானத்தின் மீது இந்தியா ரஷ்யாவை எதிர்த்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளது.

அதன்படி, 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கருத்தரங்கில் பங்கேற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டதற்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகளும், எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவும் வாக்களித்தன. சீனா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இவ்வாறு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா எந்தவித கண்டனங்களையும் தெரிவிக்காமல் இருந்தது. மேலும், இப்பிரச்சனைக்கு இரு நாடுகளும் ராஜீய ரீதியில் பேச்சுவார்தை மூலமாக தீர்வு காண அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்தது.

இந்தியா தற்போது ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தரமில்லா உறுப்பினராக உள்ளது. அதன் இரண்டாண்டு பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், உக்ரைன் சுதந்திர தினம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 24) கொண்டாடப்பட்டது. அதற்கு முன்பாக, ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர். கிழக்கு உக்ரைன் பகுதியில் பயணிகள் ரயிலுக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர்.

உக்ரைன் சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் தலைநகரின் வடக்குப் பகுதியில் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதால் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கீவ் அதிகாரிகள் தெரிவித்தனர். "வெறுக்கத்தக்க ஆத்திரமூட்டக்கூடிய வகையிலான தாக்குதலை ரஷ்யா தொடுத்துள்ளதாக" உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x