

இந்தியா உட்பட 5 நாடுகள் புறக்கணித்திருப்பதால் சார்க் மாநாட்டை பாகிஸ்தான் ஒத்திவைத்துள்ளது.
வரும் நவம்பர் 9, 10 தேதி களில் இஸ்லாமாபாதில் 19-வது சார்க் மாநாடு நடைபெற இருந் தது. இதில் பிரதமர் மோடி உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித் தது. இதற்கு ஆதரவாக வங்க தேசம், பூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன.
இந்த வரிசையில் 5-வது நாடாக இலங்கையும் சார்க் மாநாட்டில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சார்க் மாநாட்டின் எந்தவொரு முடிவும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே எடுக் கப்படுவது வழக்கம். தெற்காசி யாவின் தற்போதைய சூழல் சார்க் மாநாட்டை நடத்துவதற்கு உகந்ததாக இல்லை. எனவே இந்த மாநாட்டில் இலங்கை பங்கேற்கவில்லை.
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும். தீவிரவாத நடவடிக் கைகளை இலங்கை வன்மை யாகக் கண்டிக்கிறது. தீவிரவாதத் துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட 5 நாடுகள் புறக்கணித்திருப்பதால் சார்க் மாநாட்டை பாகிஸ்தான் அரசு ஒத்திவைத்துள்ளது.இதுதொடர் பாக அந்த நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா நேற்று கூறியிருப்ப தாவது:
சார்க் மாநாடு நடைபெற விடாமல் இந்தியா தடுத்துள்ளது. வறுமைக்கு எதிராக சார்க் நாடுகள் போரிட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஆனால் அவரின் நடவடிக்கை முரண்பாடாக உள்ளது. சார்க் அமைப்புக்கு தலைமை வகிக்கும் நேபாளத்துடன் கலந்தாலோசித்து புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.