

இலங்கையில் கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற கலவரம் குறித்து, அந்நாட்டுக்கு வந்துள்ள ஐ.நா. உதவிச் செயலர் ஒஸ் கார் பெர்னாண்டஸ் தரங்கோ எழுத்து மூலமாக அறிக்கை கோரியுள்ளார்.
இலங்கையில் உள்ள அலுத்காமா மற்றும் பெருவாலா பகுதியில், கடந்த திங்கள்கிழமை சிங்கள அமைப்பு கட்டவிழ்த்துவிட்ட வன்முறை காரணமாக முஸ்லிம்கள் 4 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இந்த இரு நகரங்களிலும் பல வீடுகள், கடைகள், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் மசூதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்பகுதிகளில் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில், இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ் கார் பெர்னாண்டஸ் தரங்கோ, பல தரப்பினருடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அலுத்காமாவில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகளிடம் இருந்து எழுத்து மூலம் அறிக்கை கோரியுள்ளார்.
இருப்பினும் இந்த அறிக்கையை வழங்குவது தொடர்பாக, இலங்கை அரசு இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது