

‘தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
‘பேரழிவுக்கான ஆயுதங்கள்’ தொடர்பான மாநாடு ஐ.நா.வில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது இந்தியா சார்பில் ஆயுதங்கள் ஒழிப்பு பிரிவு நிரந்தர பிரதிநிதியாக இருக்கும் தூதர் டி.பி.வெங்கடேஷ் வர்மா பேசியதாவது:
உலகில் ரசாயன ஆயுதங்களை எந்த சூழ்நிலையிலும் எங்கு பயன்படுத்தினாலும், எந்த நேரத்தில் யார் பயன்படுத்தினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் இந்தியாவின் உறுதியான கொள்கை. ரசாயன ஆயுதங்களைப் பெற்று, அவற்றை பயன்படுத்தும் உத்திகளையும் தீவிரவாதிகள் அறிந்து கொள்வதாக வெளியான தகவல்களால் இந்தியா கவலை அடைந்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக வெளியான தகவல்கள் உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன. எனவே, தீவிரவாதிகளின் கைகளுக்கு ரசாயன ஆயுதங்கள் செல்வதைத் தடுக்க உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் ரசாயன தொழிற்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆயுதங்கள் தயாரிக்க ரசாயன பொருட்களைச் சட்டவிரோதமாக வாங்குவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. ஏற்றுமதி விஷயத்திலும் இந்தியா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த மாநாட்டில் ரசாயன ஆயுதங்களை ஒழிக்க எடுக்கப்படும் முடிவுகள், அதை அமல்படுத்துவது போன்ற எல்லா விஷயங்களிலும் இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும். இவ்வாறு வெங்கடேஷ் வர்மா பேசினார்.