

சிரியாவைச் சேர்ந்த சிறுவர்கள் துருக்கியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்களாக பணிபுரிவதாக பிபிசி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிரியாவில் உள் நாட்டுப் போர் நிலவி வருவதால் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் துருக்கி நாட்டில் உள்ள ஒரு ஆடைத் தயாரிப்புத் தொழிற்சாலையில் சிரியாவைச் சேர்ந்த சிறுவர்கள் பலர் குழந்தைத் தொழிலாளர்களாக பணி செய்து வருவதாகவும், தொடர்ந்து பனிரெண்டு மணி நேரம் அந்தக் குழந்தைகள் வேலை செய்வதாகவும் அவர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுவதாகவும் பிபிசி செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "சட்டத்துக்குப் புறம்பான முறையில் சிரியாவைச் சேர்ந்த சிறுவர்கள் துருக்கியிலுள்ள ஆடைத் தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தயாரிக்கும் ஆடைகள் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் என்ற பிரிட்டிஷ் ஆடை நிறுவனத்திற்கும், ஏ.எஸ்.ஒ.எஸ் என்ற இணையவழி வர்த்தக நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது விநியோகஸ்தர்களிடம், '16 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா?' என்று விசாரணை செய்ததில், சிரிய குழந்தைகள் துருக்கியில் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
சிரியாவைச் சேர்ந்த சிறுவர்கள் பலர் துருக்கியில் ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருவதாக ராய்ட்டர்ஸும் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.