

பெய்ஜிங்: சீனாவில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மின்சார உற்பத்தி, வேளாண் உற்பத்தி குறைவு, ஆறுகளின் தண்ணீரின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு என பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
சீனாவில் கடந்த சில மாதங்களாகவே வெப்ப அலை நிலவுகிறது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் பலவற்றில் தண்ணீரின் அளவு குறைந்து வறட்சி தொடங்கியுள்ளது. புகழ்பெற்ற யாங்சே நதியும், போயாங் ஏரியும் வறண்டு காணப்படுகின்றன. வறட்சி காரணமாக நீர் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு தொழிற்சாலைகளில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நீர் மீன்சார உற்பத்தி பாதியளவு குறைந்துள்ளதால் மின் சிக்கன நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது.
அவ்வப்போது காடுகள் பற்றி எரியும் நிகழ்வும் நடப்பதால், சுற்றியுள்ள விவாசாய நிலங்களில் பயிர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் நிலவும் வெப்ப அலை காரணமாக சுமார் 2.2 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு நிலவும் தீவிர வெப்ப நிலையை சமாளிக்க சாலைகளின் மீது தண்ணீர் லாரிகளைக் கொண்டு வந்து பீய்ச்சி அடிக்கப்படுகிறது. சீனாவில் பல நகரங்களில் தினசரி வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. கடும் வெப்பம் மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய நதியும், மத்திய சீனாவின் நீர் தேவையை பூர்த்தி செய்து வரும் யாங்சே நதி வறண்டு காணப்படும் வீடியோ காட்சி...
கடும் வறட்சியை சமாளிக்க செயற்கை மழையை பெய்ய வைக்க சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அதுகுறித்து உறுதியான அறிவிப்பும் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
செப்டம்பர் மாதம் வரை சீனாவில் வெப்பம் நிலவும் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளதால், அதனை எதிர்கொள்வதற்கான தீவிர முயற்சியில் சீன அரசு இறங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் சீனாவின் தென் பகுதியில் 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் இரண்டு மாதங்களில் கடும் வறட்சியை சீனா சந்தித்துள்ளது.
காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். அதிகப்படியான வெயில், மழை, புயல் என இயற்கைப் பேரிடர்கள் தொடர்ந்து வருகின்றன. இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்க வேண்டிய தேவை இருக்கிறது.