

பாகிஸ்தானில் பாடகி குல்னர் என்ற முஸ்கனை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவரில் வசித்தவர் பஷ்து மொழி பாடகி குல்னர் என்ற முஸ்கன் (38).
குல்பர்க் பகுதியில் உள்ள அவரின் வீட்டுக்குள் புதன்கிழமை மாலை நுழைந்த 4 மர்ம நபர்கள், குல்னருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
குல்னரின் பூர்விகம் பார் கோட்டி பகுதியாகும். பெஷாவரில் குடிபெயர்ந்த அவர், இதுவரை 3 முறை திருமணம் செய்துள்ளார். சொந்த பிரச்சினை காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கைபர் பக்துன்வா மாகாணத்தில் பாடகர்கள், நடன கலைஞர்கள் மீது தலிபான் தீவிரவாதிகளும், முன்பகை காரணமாக உறவினர்களும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாட்டு பாடுவதும், நடனமாடுவதும் மத கோட்பாட்டுக்கு எதிரானது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன் காரணமாகக்கூட குல்னர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 2012-ம் ஆண்டு பெஷாவரில் பாடகி கஸாலா ஜாவேத் (24) இதேபோல சுட்டுக்கொல்லப்பட்டார்.