சிரியாவில் முகாமிட்டிருந்த ஈரான் ராணுவ மூத்த தளபதி கொலை

அபோல்பாஷல்
அபோல்பாஷல்
Updated on
1 min read

தெஹ்ரான்: சிரியாவில் முகாமிட்டிருந்த ஈரான் ராணுவத்தின் மூத்த தளபதி அபோல்பாஷல் அலிஜானி கொலை செய்யப்பட்டார்.

மேற்கு ஆசியாவில் உள்ள ஈரான் மற்றும் சிரியாவில் ஷியாமுஸ்லிம் பிரிவை சேர்ந்த தலைவர்கள் ஆட்சி நடத்துகின்றனர். இதன்காரணமாக இரு நாடுகளும் ராணுவரீதியில் பரஸ்பரம் உதவி செய்து வருகின்றன. ஈரான் ராணுவத்தின் ஒரு பிரிவான இஸ்லாமிக் புரட்சி படையின் மூத்த தளபதி அபோல்பாஷல் அலிஜானி அரசுமுறை பயணமாக சிரியா சென்றிருந்தார்.

இந்த சூழலில் சிரியாவில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஈரான் அரசு ஊடகம் நேற்று அறிவித்தது. அவர் எவ்வாறு இறந்தார், யார் கொலை செய்தார்கள் என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. அவரது உடல் ஈரானுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த போர் விமானங்கள் நேற்று முன்தினம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ராணுவமுகாம்களை குறிவைத்து குண்டுகளை வீசியது. இந்த முகாம்களில் ஈரானை சேர்ந்த ராணுவஅதிகாரிகள், வீரர்கள் முகாமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரான் ராணுவ மூத்த தளபதி அபோல்பாஷல் அலிஜானி உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை இஸ்ரேல் அரசோ, ஈரான் அரசோ உறுதி செய்யவில்லை.

அண்மைகாலமாக இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதேநிலை நீடித்தால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in