

இலங்கையில் பவுத்தர்கள் அமைப்பு ஒன்று முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு, வர்த்தக மையங்கள் மற்றும் வீடுகளைச் சூறையாடினர். இந்த வெறியாட்டத்தில் 3 முஸ்லிம்கள் பலியானதோடு 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் ’போது பலசேனை’ என்ற பவுத்த அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவது வழக்கமாகி வருகிறது. இவருக்கு கோத்தபய ராஜபக்சேயின் ஆதரவு பலமாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தர்கா நகர் என்ற பகுதியில் தாக்குதல் நடத்திய இந்த பவுத்த அமைப்பினர் அங்கு ஒரு வீட்டில் புகுந்து நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றதோடு வீட்டையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டுச் சென்றுள்ளனர். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இப்போது அவர்கள் அணிந்திருக்கும் உடை தவிர அவர்களுக்கு வேறு உடமைகள் இல்லை.
பவுத்தத் துறவி ஒருவரின் கார் ஓட்டுனர் தாக்கப்பட்டதையடுத்து, முஸ்லிம்கள் பகுதியில் இந்த வன்முறையை இந்த பவுத்த அமைப்பு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் வெளிப்படையாகவே வன்முறையை ஆதரித்து பேசி வருகிறார். 3 ஊர்களில் நடத்தப்பட்ட இந்த வன்முறையில் முஸ்லிம்கள் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன, வாகனங்கள் ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. தாக்குதலுக்குள்ளான 3 ஊர்களிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.