

'அமெரிக்கா நீண்ட நாள் உலகின் அதிகாரம் மிக்க இடத்தில் இருக்கப்போவதில்லை, எனவே காஷ்மீர் விவகாரத்தில் சீனா, ரஷ்யாவை நோக்கி பாகிஸ்தான் நகரும்' என நவாஸ் ஷெரீப்பின் காஷ்மீருக்கான சிறப்பு தூதர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின் காஷ்மீர் விவகார சிறப்பு தூதர்களான சையத், ஷசரா மன்சாப் அமெரிக்காவின் முக்கிய ஆலோசனை அமைப்பான அட்லாண்டிக் கவுன்சிலோடு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் பாகிஸ்தான் தரப்பில் “காஷ்மீரில் தொடரும் மனித உரிமை மீறல்களையும், அங்கு நடக்கும் வன்முறைகளை கண்டிக்க அமெரிக்கா தவறுகிறது” என குற்றஞ்சாட்டினார்.
மேலும் "அமெரிக்கா நீண்ட நாள் உலகின் அதிகாரமிக்க இடத்தில் இருக்க போவதில்லை. எனவே காஷ்மீர் விவாகாரத்தில் அமெரிக்கா, இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தால், சீனா, ரஷ்யாவின் உதவியை பாகிஸ்தான் நாடும்" என அமெரிக்காவை எச்சரித்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் காஷ்மீர் விவகார சிறப்பு தூதரான சையத் கூறும்போது, "தெற்காசியாவின் சக்தி மிகுந்த நாடாக சீனா உருவாகி வருகிறது. மேலும் முதல்முறையாக ரஷ்யா ராணுவ ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே, தெற்காசிய பிராந்தியத்தில் மாறிவரும் இந்த மாற்றங்களை அமெரிக்கா கவனிக்க வேண்டும்" எனவும் அமெரிக்காவை வலியுறுத்தியிருக்கிறார்.
பாகிஸ்தானின் காஷ்மீர் சிறப்பு தூதர்கள், அட்லாண்டிக் கவுன்சிலுக்கு இடையேயான இந்தச் சந்திப்பு 90 நிமிடங்கள் நடைபெற்றது.