

எலான் மஸ்கின் ட்விட்டர் நண்பராக அறியப்படுபவர் 23 வயதாக பிரணய் பத்தோல். புனேவைச் சேர்ந்த 23 வயது இளைஞரான இவர் டிசிஎஸ் (டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கும், எலான் மஸ்குக்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நட்பு நிலவுகிறது.
அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜிகா ஃபாக்டரியில், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ எலான் மஸ்க், அவரது ட்விட்டர் நண்பர் பிரணய் பத்தோல் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ட்விட்டரில் பகிரப்பட இது தற்போது வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தைப் பகிர்ந்த பிரணய் பத்தோல், டெக்சாஸ் கிகாஃபேக்டரியில் உங்களை சந்தித்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. தங்களைப் போன்ற யதார்த்தமான, எளிமையான மனிதரை நான் இதுவரை சந்தித்ததில்லை. நீங்கள் கோடானுகோடி மக்களுக்கு ஊக்கமளிக்கிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.
நட்பை உண்டாக்கிய ட்வீட்: உலகப் பணக்காரரும், புனே இளைஞரும் எப்படி நண்பர்களானார்கள் என்ற கேள்வி எழலாம். ஒரே ஒரு ட்வீட் தான் இவர்களின் நட்புக்குக் காரணமானது. 2018ல், டெஸ்லாவின் ஆட்டோமேட்டிக் நிறுவனத்தில் விண்ட்ஸ்க்ரீன் வைப்பர் பற்றி பிரணய் பத்தோல் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்தார். அந்த ட்வீட்டுக்கு எலான் மஸ்க் உடனடியாக பதிலளித்தார். அடுத்து வரும் தயாரிப்புகளில் தவறு திருத்திக் கொள்ளப்படும் என்று பதிலளித்தார் எலான் மஸ்க். அதன் பின்னர் எலான் மஸ்க், பிரணய் பத்தோல் இடையேயான நட்பு தொடர்ந்து வருகிறது.
கடந்த மாதம் எலான் மஸ்கை டேக் செய்த பிரணய், நீங்கள் நிக் பாஸ்ட்ரமின் அஸ்ட்ரானமிக்கல் வேஸ்ட் கட்டுரையைப் படித்தீர்கள். அதில் உள்ள கருத்தின்படி, நாம் விண்வெளியில் வாழ சாத்தியக்கூறுகளை தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நூறு ட்ரில்லியன் மனித உயிர்களை இழக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், இந்த கணக்கு சற்று மிகைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் அந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்று பதிலளித்திருந்தார்.
தற்போது இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.
பிரணய் பத்தோல் டிவிட்டர் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், இவருடைய ட்விட்டர் ஹேண்டிலை 1,80,000 பேர் பின்பற்றுகின்றனர்.