

அமெரிக்க எழுத்தாளர் பால் பீட்டிக்கு இலக்கியத்துக்கான உயரிய புக்கர் பரிசு வழங்கப்பட்டது.
உலகில் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதாக புக்கர் பரிசு கருதப்படுகிறது. இங்கிலாந்தில் வழங்கப்படும் இந்த பரிசு, சிறந்த நாவலுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு புக்கர் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் பால் பீட்டிக்கு (54) நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க எழுத்தார் பால் பீட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுதிய ‘The sellout’ என்ற ஆங்கில நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில் இன வேறுபாடு, தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவதை பற்றி இந்த நாவல் கிண்டல் செய்து எழுதப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்கர் தனது அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் இந்த நாவலில் கூறப்பட்டுள்ளது.
லண்டன் கில்ட் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் புக்கர் பரிசு மற்றும் 50 ஆயிரம் பவுண்ட் (சுமார் 40 லட்சம் ரூபாய்) பரிசுத் தொகையை பால் பீட்டி பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசும்போது, ‘‘எழுதுவதை நான் வெறுக்கிறேன். இந்தப் புத்தகம் மிகவும் கடினமானது. இதை எழுத மிகவும் கஷ்டப்பட்டேன். இந்த நாவலை படிப்பதும் மிகவும் கடினம் என்பது எனக்கு தெரியும்’’ என்றார்.
புக்கர் பரிசு தேர்வாளர்கள் குழுத் தலைவர் அமண்டா போர்மேன் கூறும்போது, ‘‘நான்கு மணி நேரம் தீவிர விவாதத்துக்குப் பிறகு, ‘The Sellout’ நாவலை எழுதிய பால் கீட்டி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்’’ என்றார்.
நியூயார்க்கில் தற்போது வசிக்கும் பால் பீட்டி, இதற்கு முன்னர் ‘ஸ்லம்பர்லேண்ட்’, ‘டஃப்’ மற்றும் ‘தி ஒயிட் பாய் ஷப்புள்’ ஆகிய 3 நாவல்களை எழுதி உள்ளார்.