Published : 22 Aug 2022 05:40 AM
Last Updated : 22 Aug 2022 05:40 AM

சோமாலியா ஓட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு: 70 பேர் படுகாயம்; 106 பேர் பத்திரமாக மீட்பு

மொகதிசு: சோமாலியா ஓட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 106 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சோமாலியாவில் 1.59 கோடி மக்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சோமாலியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அமைதி, வளர்ச்சிக்கான கட்சியின் தலைவர் ஹாசன் ஷேக்முகமது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிக்கு எதிராக அல் ஷாபாப் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இது, அல்-காய்தாவின் ஆதரவு அமைப்பாகும். சோமாலியாவின் தெற்கு, மத்திய பிராந்தியத்தின் பெரும்பகுதி அல் ஷாபாப் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தலைநகர் மொகதிசு மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்ற அந்த அமைப்பு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில் கடந்த 19-ம்தேதி சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உள்ள ஹயாத் ஓட்டலை அல் ஷாபாப் தீவிரவாதிகள் சிறைபிடித்தனர். அப்போது ஓட்டலில் சுமார் 250 பேர் தங்கி இருந்தனர்.

அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் சோமாலிய ராணுவ வீரர்களும் போலீஸாரும் ஈடுபட்டனர். ஓட்டலை சுற்றிவளைத்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளும் திருப்பிச் சுட்டனர். சுமார் 30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஓட்டலுக்குள் இருந்த 106 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எனினும், தீவிரவாதிகளின் தாக்குதலில் ஓட்டல் ஊழியர்கள், அங்கு தங்கியிருந்தவர்கள் 40 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் பலர் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆவர்.

ராணுவம் விளக்கம்

தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து சோமாலிய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது. அல் ஷாபாப் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் மொகதிசுவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. ஹயாத் ஓட்டலில் வெளிநாட்டினர், முக்கியப் பிரமுகர்கள் தங்குவதால் அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த 19-ம் தேதி ஓட்டல் வாயிலில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை மோதி அல் ஷாபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர் ஓட்டலுக்குள் நுழைந்து பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்தனர். ஓட்டல் வளாகம், அறைகள் முழுவதும் கண்ணி வெடிகளை மறைத்து வைத்தனர். இதன்காரணமாக பாதுகாப்புப் படை வீரர்கள் முன்னேறிச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அமெரிக்காவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஆல்பா படைப் பிரிவுவீரர்கள், ஓட்டலுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை வேட்டையாடினர். சுமார் 30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

உரிமையாளர் சுட்டுக் கொலை

ஓட்டலின் உரிமையாளர்களில் ஒருவரான அப்தி ரஹ்மானை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள்அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பலர் ஓட்டலின் ஜன்னல்கள் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர். அவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. ஓட்டலில் தங்கியிருந்த 106 பேரை பத்திரமாக மீட்டுள்ளோம்.

இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x