அருணாச்சலுக்கு அமெரிக்க தூதர் வருகை: சீனா கடும் எதிர்ப்பு
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் அருணாச்சலப் பிரதேசத்திற்கு வருகை தந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய-சீன எல்லையில் அமெரிக்காவின் தலையீடு பிரச்சினைகளைத்தான் உருவாக்கும் என்று கூறியுள்ளது.
அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காந்துவின் அழைப்பின் பேரில் அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா கடந்த அக்டோபர் 22-ம் தேதி தவாங் பகுதிக்கு வருகை தந்தார்.
சீனாவின் அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ என்பவர் கூறும்போது, “அவரது வருகை கடினமாக உழைத்து வென்றெடுத்த சமாதானத்தையும் அமைதியையும் சிக்கலுக்குள்ளாகுவதாகும். மேலும் அவர் சர்ச்சைக்குரிய பகுதிக்கு வந்து சென்றுள்ளார். இதனால் நாங்கள் உறுதியாக அமெரிக்காவின் இந்த தலையீட்டை எதிர்க்கிறோம்.
சீனா-இந்திய எல்லையின் கிழக்குப் பகுதி குறித்த நிலைப்பாட்டில் சீனா உறுதியாகவும் சீராகவும் தெளிவாகவும் உள்ளது. தற்போது இருநாடுகளும் உரையாடல் மற்றும் ஆலோசனைகள் மூலம் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறது. 3,488 கிமீ கட்டுப்பாட்டு எல்லைப் பகுதி குறித்த தீர்வுக்காக இருநாட்டு சிறப்புப் பிரதிநிதிகளூம் 19-வது சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளன.
இந்நிலையில் அங்கு அமெரிக்க தூதரை அழைத்து பார்வையிடச் செய்வதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எனவே இந்தியா-சீனா மேற்கொண்டுள்ள உரையாடல்களை முன்வைத்து அமைதி, சமாதானம் ஆகியவற்றிற்கு உதவுவதுதான் இதில் 3-ம் நாட்டினுடைய பொறுப்பாக இருக்க முடியும். ஆனால் அமெரிக்காவின் இந்த வருகையோ இந்தியா-சீனா முயற்சிகளை முறியடிப்பதாக உள்ளது.
ஏற்கெனவே உள்ள விவகாரத்தை அமெரிக்க தூதரின் வருகை மேலும் சிக்கலாகவே மாற்றும். எல்லை விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
சீன-இந்திய எல்லைப் பிரச்சினை உணர்வு பூர்வமானது, சிக்கல் நிரம்பியது எனவே இதில் 3-வது நாடு தலையிடுவது பதற்றங்களை அதிகரிக்கவே உதவும். கடைசியில் இருநாட்டு மக்களும்தான் பாதிப்படைவார்கள்.
இந்தியாவும் சீனாவும் தங்களிடையே உள்ள பிரச்சினைகளை தாங்களாகவே தீர்த்துக் கொள்ளவும், இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களைக் காக்கவும் போதிய அறிவும் திறமையும் உள்ளது” என்றார் லூ.
அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடுகிறது. இந்தியாவோ 1962 போரின் போது சீனாவினால் ஆக்ரமிக்கப்பட்ட அக்சய் சின் பகுதி மீது கோரலை வைக்கிறது.
