அமெரிக்க சுற்றுலா விசா | 2024 வரை காத்திருக்க வேண்டும்

அமெரிக்க சுற்றுலா விசா | 2024 வரை காத்திருக்க வேண்டும்
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்க சுற்றுலா விசாவை பெறுவதற்கான காத்திருப்பு காலம் ஒன்றரை ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக விடுமுறை கால பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பயண ஏற்பாட்டு முகவர்கள் கூறியது:

இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமெரிக்காவின் நியூயார்க்கில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட ஆசைப்பட்டு அமெரிக்க தூதரகத்தின் வலைதளத்தை அணுகி சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கான நேர்காணல் தேதி மார்ச் 2024-ல் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பார்க்கையில், அந்த மென்பொறியாளர் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தைதான் அமெரிக்காவில் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க சுற்றுலா விசாவை பெறுவதற்கான சராசரி காத்திருப்பு காலம் தற்போது சென்னைக்கு 557 நாட்களாகவும், டெல்லிக்கு 581 நாட்களாகவும், மும்பைக்கு 517 நாட்களாகவும் உள்ளன. அதேசமயம், மாணவர் சுற்றுலா விசாவுக்கான காத்திருப்பு காலம் சென்னைக்கு 12 நாட்களாக உள்ள நிலையில், டெல்லிக்கு 479 நாட்களாகவும், மும்பைக்கு 10 நாட்களாகவும் உள்ளன. குறிப்பாக, கனடா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுக்கான விசா பரிசீலனைக் காலம் மிக அதிகமாக உள்ளது. இவ்வாறு முகவர்கள் தெரிவித்தனர்.

தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் சில வகை விசாக்களுக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் காத்திருப்பு காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in