

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒப்புக் கொண்டதையடுத்து 2 இந்தி யர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மூர்த்தி கபில்தேவுக்கு (25) 24 மாதங்களும், மொங்கன் அன்பழகனுக்கு (41) 18 மாதங்களும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனைக் காலம் கைது செய்யப்பட்ட நாளிலிருந்தே (2013, டிசம்பர் 9) கணக்கில் கொள்ளப்படும்.
"கபில்தேவ் மீது வன்முறையில் ஈடுபட்டது மற்றும் பேருந்து நேரக் காப்பாளர் மாடம் வொங் கெக் வூனை தாக்கியது என 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருந்தது. முதல் குற்றத்தை அவரே ஒப்புக் கொண்டார். மற்றொரு குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது" என அரசு துணை வழக்கறிஞர் சரா ஓங் தெரிவித்தார்.
பேருந்து மீதும் போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கியதாக அன்பழகன் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில், கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி ஒரு பேருந்து, சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் மீது மோதியது. இதனால் அப்பகுதியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வன்முறை வெடித்தது. 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போலீஸாரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில் 23 அவசர உதவி வாகனங்கள் சேதமடைந்ததுடன், 54 போலீஸார் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக அங்கு பணிபுரியும் 25 இந்தியர்கள் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.