Published : 16 Aug 2022 06:47 AM
Last Updated : 16 Aug 2022 06:47 AM

இலங்கை கடற்படைக்கு டோர்னியர் கண்காணிப்பு விமானம் - இந்தியா வழங்கியது

இந்தியா சார்பில் இலங்கை கடற்படைக்கு ‘டோர்னியர் 228' கடல்சார் கண்காணிப்பு விமானம் நேற்று வழங்கப்பட்டது. காட்டுநாயக்க விமானப் படை தளத்தில் நடந்த விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்க, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே மற்றும் இருநாட்டு கடற்படை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். படம்: பிடிஐ

கொழும்பு: இந்தியா – இலங்கை இடையிலான பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2018 ஜனவரியில் நடந்த போது, இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக 2 டோர்னியர் உளவு விமானங்களை அந்நாடு கோரியது. இதன் அடிப்படையில் ஒரு டோர்னியர் விமானத்தை இலங்கைக்கு இந்தியா நேற்று வழங்கியது.

இதற்கான நிகழ்ச்சி, கொழும்பு விமான நிலையத்தை அடுத்துள்ள கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்திய கடற்படை துணைத் தளபதி எஸ்.என்.கோர்மேட், கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இலங்கை கடற்படையின் விமானிகள், கண்காணிப்பாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர் என 15 பேர் விமானத்தை பராமரிப்பார்கள்.

யுவான் வாங்-5 என்கிற சீனாவின் உளவுக் கப்பல், இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் 1 வாரம் நிறுத்தப்படுவதற்காக வருவதற்கு முதல்நாள் இந்த விமானம் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் 4 நாள் முன்னதாக ஆகஸ்ட் 11-ல் வரவிருந்தது. ஆனால் இலங்கை அனுமதி வழங்காததால் கப்பலின் வருகை தள்ளிப்போனது. பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் கவலைகள் காரணமாக கப்பல் வருகையை தள்ளி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. இந்தக் கப்பல் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை நிறுத்திவைக்க இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. பாக்.உடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபடவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x