Published : 14 Aug 2022 02:19 PM
Last Updated : 14 Aug 2022 02:19 PM

’வென்டிலேட்டர் அகற்றம்; எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பேசுகிறார்’ - தகவல்

நியூயார்க்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருக்கும் அவருக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டுவிட்டதாகவும், அவர் மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடந்த இடமான சவுதாக்கா மையத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதேபோல் சல்மான் ருஷ்டியின் முகவர் ஆண்ட்ரூ வில்லியும் இத்தகவலை உறுதிசெய்து வாஷிங்டன் போஸ்ட் நாளேடுக்கு பேட்டியளித்துள்ளார்.

நடந்தது என்ன? எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, இந்திய நேரப்படி கடந்த வெள்ளி இரவு 8.30 மணிக்கு நியூயார்க் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை நேர்காணல் செய்யும் நபரும் அரங்கில் தயாராக இருந்தார். அப்போது திடீரென கூட்டத்திலிருந்து பாய்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் சல்மான் ருஷ்டி மீது கத்தியால் குத்தினார்.

இதில் சல்மானின் கை நரம்பு, கழுத்து, நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சல்மான் ருஷ்டி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவசர அறுவை சிகிச்சைக்களுக்குப் பின்னர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் ஹாதி மட்டர் (24) குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். தான் கொலை செய்யும் எண்ணத்தில் வரவில்லை என்று கூறியுள்ளார்.

சல்மான் ருஷ்டி எழுதிய 'சாட்டனிக் வெர்சஸ்' என்ற புத்தகத்திற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் தடை விதித்துள்ளன. முஸ்லிம்களை, இஸ்லாமிய இறைத்தூதரை அவமதிக்கும் கருத்துகளை அப்புத்தகத்தில் எழுதியதாகக் கூறி சல்மான் தலைக்கு ஈரான் அரசு விலை நிர்ணயித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேல் தலைமறைவாகவே இருந்த சல்மான் கடந்த 2010க்குப் பின்னர் சகஜமாக நடமாடிவந்தார். இந்நிலையில் தான் அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது.

தலைவர்கள் கண்டனம்: சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது கோழைத்தனமான தாக்குதல் என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x