

எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது வன்முறைத் தாக்குதல் நடந்துள்ள நிலையில், அங்கிருந்து செய்தியாளர் ஒருவர் தான் கண்ட காட்சிகளை விவரித்துள்ளார்.
நியூயார்க்கில் சல்மானின் நிகழ்ச்சி நடந்த அரங்கில் இருந்த அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர் ஒருவர் கூறுகையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கருப்பு நிற ஆடையுடன் முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்திருந்த நபர் ஒருவர் வேகமாக மேடையை நோக்கி ஓடினார். அவர் திடீரென சல்மான் மீது பாய்ந்தார். முதலில் இது சல்மானுக்கு இருக்கும் அச்சுறுத்தலை எடுத்துரைக்க நடத்தப்படும் ஸ்டன்ட் என்று நினைத்தோம். ஆனால் விநாடிகளில் விபரீதம் புரிந்தது. அந்த நபர் 20 விநாடிகளில் 10லிருந்து 15 முறை கத்தியால் குத்தியிருப்பார். சல்மான் ருஷ்டி சரிந்து விழுந்தார். அங்கிருந்த நபர்கள் உடனே சல்மானின் கால்களை உயர்த்திப் பிடித்தனர். இதன் மூலம் அவரின் இதயத்திற்கு கொஞ்சம் ரத்தம் அதிகமாகச் செல்லும் என்பதால் அவ்வாறு செய்தனர் என நினைக்கிறேன். சில நிமிடங்களில் அவர் ஏர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார் என்று விவரித்தார்.
ஆளுநர் ஆறுதல்: இந்தச் சம்பவம் குறித்து நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நியூயார்க் போலீஸார் துரிதமாக செயல்பட்டதற்கு நன்றி. சல்மானின் அன்புக்குரியவர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் இத்தருணத்தில் ஆறுதல் கூறுகிறோம். போலீஸார் விசாரணையை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
அரங்கில் சம்பவம் நடந்த போது 2500 பேர் இருந்துள்ளனர். இந்த அரங்கு சல்மானுக்கு புதிதில்லை எனக் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் சல்மான் கலந்து கொள்வாராம். இந்நிலையில் தான் சல்மான் மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்திய நேரப்படி சரியாக வியாழன் இரவு 8.30 மணிக்கு இத்தாக்குதல் நடந்திருக்கிறது.