Published : 13 Aug 2022 05:44 AM
Last Updated : 13 Aug 2022 05:44 AM

உக்ரைன் அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகளை வீசுவது ஆபத்தானது - ரஷ்யாவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு

நியூயார்க்: உக்ரைன் அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகள் வீசப்படுவது ஆபத்தானது என்று ஐ.நா. சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே நேற்று 170-வதுநாளாக போர் நீடித்தது. உக்ரைனின் ஜேபரோஜையா நகரில்அமைந்துள்ள அணு மின் நிலையத்தின் அருகே நேற்று முன்தினம் 5 ஏவுகணைகள் வெடித்துச்சிதறின. அதிர்ஷ்டவசமாக அணு மின் நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசுகையில், “தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜேபரோஜையா அணு மின் நிலையத்தில் ஏவுகணைகள் வீசப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. ரஷ்யாவும் உக்ரைனும் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும். அணு மின் நிலையங்கள் அருகே போர் நடைபெற கூடாது. அந்த பகுதிகளில் இருந்து ரஷ்யாவும் உக்ரைனும் ராணுவ வீரர்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பேரழிவு ஏற்பட கூடாது” என்றார்.

ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பேசியதாவது:

அணு மின் நிலையங்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால் மனிதர்கள், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். உக்ரைனின் ஜேபரோஜையா அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகள் விழுந்து வெடித்திருப்பது மிகுந்தகவலை அளிக்கிறது. சர்வதேச அணுசக்தி அமைப்பின் வழிகாட்டுதல்களை ரஷ்யாவும், உக்ரைனும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

பொறுமை காக்க வேண்டும்

உக்ரைன் போர் தொடங்கிய போது, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இரு நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். ரஷ்யாவும் உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இவ்வாறு ருசிரா கம்போஜ் வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x