

மரபணு குறைபாடு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் சிறுமிக்கு அமெரிக்க மருத்துவமனை இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது. எனினும் சிறுமியின் குடும்பத்துக்கு இது வரை விசா வழங்கப்படாததால் அவரது தந்தை அமெரிக்கா செல்ல முடியாமல் பரிதவித்து வருகிறார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் வசித்து வருபவர் ஷாஹித் உல்லா. இவரது 6 வயது மகளான மரியா அரிய வகை மரபணு குறைபாடு நோயால் அவதிப்பட்டு வருகிறார். முது கெலும்புகள் அனைத்தும் ஒன் றோடு ஒன்று அழுத்திக் கொண்டிருப்பதால் மரியாவால் சக குழந்தை கள் போல எழுந்து நடமாடவோ, விளையாடவோ முடியவில்லை. இதைத் தொடர்ந்து மரியாவைக் குணப்படுத்த உலகில் எங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரங்களை இணையதளம் வாயிலாக ஷாஹித் தேடத் தொடங்கினார். அப்போது இதே நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், சிலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகள் பற்றி பரிந்துரை செய்திருந்தனர். மேலும் மரியாவின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை இந்தியா, ஜெர்மனி நாடுகளில் உள்ள பரிசோதனை கூடங்களுக்கும் அனுப்பி வைத்து நோயின் தன்மை பற்றி அறிந்து கொண்டார்.
இந்தச் சூழலில் மரியாவின் அவல நிலையை அறிந்த அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்று இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு வரும் நவம்பர் 2-ம் தேதி அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனால் ஷாஹித் மகிழ்ச்சி அடைந்தார். அதே சமயம் அமெரிக்கா செல்வதற்காக அவர் தாக்கல் செய்த விசா விண்ணப்பம் 2 முறை நிராகரிக்கப்பட்டதால், தற்போது அவர் மிகுந்த பரிதவிப்பில் உள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி மூலம் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்த ஷாஹித், ‘‘இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 3-வது முறையாக விசா விண் ணப்பித்துள்ளேன். அவர்கள் விசா வழங்குவதற்கு கால தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர். அடுத்த புதன்கிழமைக்குள் அமெரிக்கா சென்றால் தான் அறுவை சிகிச்சைக்கான மருத்துவ சோதனைகளையும் எடுக்க முடி யும். எனக்கு என்ன செய்வ தென்றே தெரியவில்லை’’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளரான கோவன் கூறும் போது, ‘‘இந்த விவகாரத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். வேறு எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது’’ என்றார்.