Published : 12 Aug 2022 10:20 PM
Last Updated : 12 Aug 2022 10:20 PM

நியூயார்க்கில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்

நியூயார்க்: பிரபல புதின எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க் நகரில் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகப் புகழ் பெற்ற புதின எழுத்தாளர் சர் அகமது சல்மான் ருஷ்டி. மும்பையில் பிறந்தவர். அவருக்கு வயது 75. ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படைப்புக்காக புக்கர் பரிசை வென்றவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த படைப்புக்காக அவர் இஸ்லாமிய நாடுகளின் அதிருப்தியை சம்பாதித்தார். அதோடு அவருக்கு எதிராக ஃபத்வாவும் அறிவிக்கப்பட்டது. அப்போது முதலே அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

இந்நிலையில், நியூயார்க் நகரில் மேற்கு பகுதியில் இன்று சொற்பொழிவு ஆற்ற இருந்தார் ருஷ்டி. அதற்காக நூற்றுக்கணக்கான பேர் அங்கு திரண்டுள்ளனர். அப்போது பார்வையாளர்களில் ஒருவர் திடீரென மேடையில் ஏறி சல்மான் ருஷ்டியை தாக்கியுள்ளார். அவரது தாக்குதலில் ருஷ்டி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

அவர் மீது எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்பது தெரியவில்லை. தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை. போலீசார் அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சல்மான் ருஷ்டி, தற்போது ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து சரிவர தெரியவில்லை என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x