உலக நாடுகள் முழுவதும் பரவினாலும் கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு

உலக நாடுகள் முழுவதும் பரவினாலும் கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு
Updated on
1 min read

யாங்யாங்: கரோனாவுக்கு எதிரான போரில் வடகொரியா வெற்றி பெற்றுவிட்டதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

வடகொரியாவில் கடந்த மேமாதம் கரோனா தொற்று பரவியது. ஒமிக்ரான் வகை கரோனா பாதிப்பு அங்கு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு நோய் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இது பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகவில்லை.

அங்கு கரோனா பரிசோதனை வசதிகள் சரியாக இல்லாததால், கரோனா நோயாளிகளாக யாரும்அறிவிக்கப்படவில்லை. காய்ச்சல்ஏற்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர். வடகொரியாவில் மொத்தம்48 லட்சம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 74 பேர் உயிரிழந்தனர். இங்கு இறப்பு சதவீதம் 0.002 சதவீதம்.

வடகொரியாவில் கடந்த ஜூலை29-ம் தேதி முதல் யாருக்கும் புதிதாக காய்ச்சல் ஏற்படவில்லை.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “கரோனாவுக்கு எதிரான போரில் வடகொரியா மாபெரும் வெற்றியடைந்துள்ளது. கரோனா தொற்று நிலைமையை வடகொரியா கையாண்டது அற்புதமான நிகழ்வு. உலக சுகாதார வரலாற்றில் இது போல் நடந்ததில்லை. இந்த வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது ” என பெருமையுடன் கூறினார்.

கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் ஜோ யாங் அளித்த பேட்டியில், “தொற்று பரவிய சமயத்தில் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால், அவர்ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்கவில்லை. நாட்டு மக்களையேபற்றிய சிந்தித்துக் கொண்டிருந்தார். வடகொரியாவில் கரோனாபரவியதற்கு, தென் கொாரியாவே காரணம். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.

கிம் ஜாங் உன்னுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என வட கொரியா குறிப்பிடுவது இதுவே முதல் முறை.

நிபுணர்கள் சந்தேகம்

கரோனா தொற்றை கட்டுப்படுத்தி விட்டதாக வடகொரியாகூறுவதை உலக சுகாதார அமைப்பு உட்பட நிபுணர்கள் பலர் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.

சுகாதார வசதிகள் மிக மோசமாக உள்ள நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு கரோனா சிகிச்சைக்கான மருந்துகளோ, தடுப்பூசிகளோ இல்லை. இந்நிலையில் கரோனாதொற்றில் மாபெரும் வெற்றிபெற்றதாக கூறுவதை நிபுணர்களால் நம்ப முடியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in