

சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியில் உள்ள சன்ஷா நகரில் கடல் ஆமை பாதுகாப்பு மையத்தை நிறுவப் போவதாக சீனா நேற்று அறிவித்தது.
தென்சீன கடல் பகுதியில் உள்ள பல்வேறு தீவுக் கூட்டங்களுக்கு சீனா சொந்தம் கொண்டாடி வரு கிறது. இதே தீவுகளுக்கு வியட் நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனை உள்ளிட்ட நாடுகளும் சொந்தம் கொண்டாடி வரு கின்றன.
இந்நிலையில் தங்களது பிடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக சீனா இந்த அறிவிப்பை வெளியிட் டுள்ளது.
இதுகுறித்து சன்ஷா நகர மேயர் ஜியாவ் ஜீ கூறும்போது, “கடல்சார் பல் உயிரின பாது காப்பை மேம்படுத்தும் வகையில், இங்கு கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். இங்கு ஆமை குஞ்சு பொரித்தல் மற்றும் ஆமை தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் இத்துறை சார்ந்த நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இந்த மையம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
தென்சீன கடல் பகுதியில் உள்ள பல்வேறு தீவுக் கூட்டங் களை நிர்வகிப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு சன்ஷா நகரை சீன அரசு நிறுவியது.
இங்கு பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. இவை உள் ளூர் நிர்வாகத்தின் தலைமையில் இயங்கி வருகின்றன.