

பாகிஸ்தான் ராணுவம் குறித்து கட்டுரை எழுதியதற்காக பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சிரில் அல்மெய்டாவுக்கு பாகிஸ்தானிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் புகழ் பெற்ற 'டான்' பத்திரிகையில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி, பாகிஸ்தானின் பொதுமக்கள் மற்றும் ராணுவத்துக்கும் இடையே நிலவும் பிளவு குறித்தும், ராணுவ உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (இன்டர் சர்வீஸ் இன்டலிஜன்ஸ்) தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இருந்து பாகிஸ்தானை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்துகிறது என்றும் சிரில் அல்மெய்டா எழுதியிருந்தார். அக்கட்டுரை முகப்புப் பக்கத்தில் வெளியாகியிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக மறுத்தது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், "முற்றிலும் ஜோடிக்கப்பட்ட இந்தக் கட்டுரை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்து இருந்தார்.
இதனையடுத்து சிரில் அல்மெய்டாவை பாகிஸ்தானிலிருந்து வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்தது.
இது தொடர்பாக சிரில் அல்மெய்டா இன்று (திங்கட்கிழமை) தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில், "நான் குழப்பமடைந்திருக்கிறேன். எனக்கு பாகிஸ்தானை விட்டு வேறு எங்கும் போகும் எண்ணம் இல்லை. இதுதான் எனது வீடு" என்று பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக செப்டம்பர் 26-ம் தேதி இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதில் கணிசமான எண்ணிக்கையில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இந்தியாவின் துல்லியத் தாக்குதலை முற்றிலுமாக மறுத்த பாகிஸ்தான் எங்களது ராணுவ முகாமில்தான் இந்தியா தாக்குதல் நடத்தியது என்றும், இந்தத் தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்தியா மீது குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.